;
Athirady Tamil News

காணாமல் போனோர் எவரும் மறைத்து வைக்கப்படவில்லை: மைத்திரி…!!

0

வடக்கில் காணாமல் போனவர்களின் உறவுகள் கூறுவது போல், யாரும் மறைத்து வைக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலில் சிறீலங்கா சுதந்திரகட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து இன்று (திங்கட்கிழமை) யாழ்.மாநகரசவை மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் அவர் உரையாற்றுகையில், “மீள்குடியேற்றத்திற்காக வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 100ற்கு 60 வீதமான நிதி செலவிடப்படாமல் திரும்பியிருக்கின்றது. இந்த நிதி மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டு திட்டங்களை உருவாக்குவதற்காக கொடுக்கப்பட்டது. அந்த நிதியில் 60 வீதமான நிதி செலவிடப்படாத நிலையில் திரும்பியிருக்கின்றது.

இவ்வாறு பெருமளவு நிதி திரும்பி செல்வதற்கு காரணம் அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையில் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதேயாகும். தேர்தல் காலத்தில் நீங்கள் பிரிந்து நின்று செயற்படலாம். ஆனால் தேர்தலின் பின்னர் ஒன்றிணையுங்கள்.

இதேபோல் நாங்கள் ஆட்சியமைத்ததன் பின்னரான 3 வருடங்களில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து 75 வீதமான காணிகளை மக்களிடம் மீள வழங்கியிருக்கிறோம். மிகுதி காணிகளையும் மக்களிடம் மீள வழங்குவோம்.

அந்த விடயத்தில் நான் மிகவும் கரிசணையுடன் இருக்கிறேன். இன்றைய தினம் பொன்னாலை ப ருத்துறை வீதி திறக்கப்படுகிறது. அந்த வீதி 1990ஆம் ஆண்டு பூட்டப்பட்டது. இந்த வீதி திறக்கப்பட்டால் மக்கள் 50 கிலோ மீற்றர் தூரம் சுற்றி போகவேண்டிய அவசியம் எழாது. மற்றும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி சிங்களவர்களுடைய கட்சி என சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. சிங்களவர்களுடைய கட்சி என்றால் வடகில் தமிழ் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியிருக்க மாட்டோம்.

சிறீமாவோ பண்டாரநாயக்க, யாழ்ப்பாணம் வந்தபோது அவருக்கு இங்குள்ள பெண்கள் தங்கள் தலைமுடியை நிலத்தில் விரித்து அதன் மேல் ஏறி நடந்து போக சொன்னார்களாம். அதனை சிறிமாவோ பண்டாரநாயக்க மறுத்தார். அந்தளவுக்கு வடக்கு மக்கள் சுதந்திரக்கட்சிக்கு ஆதரவளித்தார்கள். அதேபோல் 1982ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது கொப்பேக்கடுவ என்பவருக்கு வடக்கு மக்கள் அமோக ஆதரவினை வழங்கியிருந்தார்கள். அதனை யாரும் மறக்க இயலாது.

எனவே சிறீலங்கா சுதந்திகட்சி என்பது சிங்கள கட்சி அல்ல. அது இந்த நாட்டில் வாழும் சகல மக்களுக்குமான கட்சியாகும்.

பண்டார நாயக்க சிறீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கியபோது தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களை சேர்ந்த 3 செயலாளர்களை நியமித்தார். இது சிறீலங்கா சுதந்திரக்கட்சி சகல இனங்களுக்குமான கட்சி என்பதற்கு சிறந்த உதாராணமாகும். ஐ.நா செயலாளர் நாயகத்தை சந்தித்து இலங்கையில் மனிதாபிமானமும், சுதந்திரமும் ஏற்பட ஒத்துழைப்பு வழங்குங்கள் என கேட்டிருக்கிறேன். இப்போது இலங்கையை பல நாடுகள் மதிக்கின்றன.

வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்களின் பெற்றோர்கள் என்னை சந்தித்து பேசினார்கள். அதன் போது காணாமல் போனவர்கள் இந்த நாட்டில் ஒழித்து வைக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். இராணுவ முகாம்களில் பொலிஸ் நிலையங்களில் அதேபோல காடுகளில் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தார்கள். ஜனாதிபதி எனும் வகையில் அது தொடர்பில் தெளிவாக தேடி பார்த்தேன்.

அவர்கள் சொன்னது போல காணாமல் போன எவரும் அவ்வாறு மறைத்து வைக்கப்படவில்லை என்பதனை கூறுகின்றேன். அந்த பெற்றோர்களுக்கு நிதி உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளேன். காணமல் போனார் என்பது வடக்கில் மாத்திரம் இல்லை. தெற்கிலும் சிங்கள முஸ்லீம் என பலர் காணாமல் போயுள்ளனர். எனவே அரசாங்கம் எனும் வகையில் என்னால் செய்ய கூடியதனை செய்வேன். எனக்கு ஒழிப்பதற்கு மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் பகிரங்கமாக எது என்றாலும் பேசுவேன்” என கூறினார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + thirteen =

*