;
Athirady Tamil News

ரூ.500 கட்டணம் செலுத்தி ஒருநாள் ஜெயில் வாழ்க்கையை அனுபவித்த கேரள நகைக்கடை அதிபர்..!! (வீடியோ)

0

கேரளாவை சேர்ந்தவர் பாபிசெம்மனூர். பிரபல நகைக்கடை அதிபரான இவருக்கு தென்னிந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான நகைக்கடைகள் உள்ளது.

பெரும் செல்வந்தரான பாபிசெம்மனூர் தன்னிடம் உள்ள பணம் மூலம் தனது விருப்பங்கள் அனைத்தையும் எளிதாக பூர்த்திசெய்து வந்தார். ஆனாலும் அவருக்கு நிறைவேறாத ஒரு ஆசை இருந்தது.

அது ஜெயில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே. இந்த வினோத ஆசையை உடனடியாக நிறைவேற்றவும் அவர் விரும்பினார். அவருக்கு பெரிய போலீஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பு இருந்ததால் அவர்களிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

பெரிய நகைக்கடை அதிபரின் இந்த ஆசை போலீஸ் அதிகாரிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் குற்றம் செய்யாத யாரையும் ஜெயிலில் அடைக்க சட்டத்தில் இடம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி அவரது விருப்பத்தை நிறைவேற்ற முடியாது என்று அவர்கள் கைவிரித்து விட்டனர்.

இதனால் பாபி செம்மனூர் ஏமாற்றம் அடைந்தாலும் தனது ஆசையை மட்டும் அவர் கைவிடவில்லை. எப்படியாவது ஜெயில் வாழ்க்கை என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

அப்போதுதான் அவரது ஆசையை நிறைவேற்றும் ஒரு செய்தி அவருக்கு கிடைத்தது. தெலுங்கானா மாநிலம் சங்கரரெட்டி மாவட்டத்தில் 1796-ம் ஆண்டு நிஜாம் மன்னர் காலத்தில் செயல்பட்ட ஒரு ஜெயில் தற்போது சுற்றுலா தலமாக மாற்றப்பட்டு உள்ளதாகவும், அந்த ஜெயிலில் ரூ.500 பணம் செலுத்தினால் ஒரு நாள் ஜெயில் வாழ்க்கையை வாழும் திட்டம் நடைமுறையில் இருப்பதும் அவருக்கு தெரியவந்தது. 2012-ம் ஆண்டு புதிய ஜெயில் அங்கு கட்டப்பட்டதை தொடர்ந்து நிஜாம் மன்னர் கால ஜெயில் இதுபோல மாற்றப்பட்டு இருந்தது.

கைதி உடை மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் பாபி செம்மனூர்.

உடனடியாக நகைக்கடை அதிபர் பாபிசெம்மனூர் தனது நண்பர்கள் சமூக சேவகர் ஆசிர்அலி, யோகா ஆசிரியர் பிரசாந்த் மற்றும் வினோய் ஆகியோருடன் அந்த ஜெயிலுக்கு சென்றார். அங்கு அதிகாரிகளை சந்தித்து தாங்கள் வந்த நோக்கத்தை தெரிவித்தார். அதன்படி அவர்களிடம் தலா ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

அவர்களிடம் ஜெயில் கைதிகள் கடைப்பிடிக்கும் நிபந்தனைகளை அவர்களும் கடைப்பிடிக்க வேண்டும். ஜெயிலில் வழங்கும் உணவு வகைகள், உடைகளையே ஏற்றுக்கொள்ள வேண்டும். செல்போன் பயன்படுத்தக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து ஒரு நாள் கைதியாக அவர்கள் ஜெயில் வாசத்தை அனுபவித்தனர்.

இதுபற்றி பாபி செம்மனூர் கூறும்போது என்னிடம் ஏராளமான பணம் இருந்தாலும் ஜெயில் வாழ்க்கையை அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற எனது ஆசையை நிறைவேற்ற முடியாமலேயே இருந்தது. சங்கரரெட்டி நிஜாம் மன்னர் ஜெயிலில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததும் அதை தவறாமல் பயன்படுத்திக் கொண்டேன். கைதிகளுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளுடன் ஒருநாள் ஜெயில் வாழ்க்கையை அனுபவித்தது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது என்றார்.

ஏற்கனவே கடந்த மாதம் மலேசியாவை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஜெயில் வாழ்க்கையை அனுபவித்து சென்று உள்ளனர்.

மேலும் இந்த மன்னர் கால ஜெயில் கேரள பாணியில் ஆயுர்வேத ஆஸ்பத்திரியும், ஆயுர்வேத மசாஜ் சென்டரும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*