;
Athirady Tamil News

தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரிய டி.டி.வி.தினகரன் மனு மீதான விசாரணை 15-ந் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

0

தேர்தல் சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக டி.டி.வி.தினகரன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு டெல்லி ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைந்த அ.தி.மு.க. வுக்கு ஒதுக்கீடு செய்து தலைமை தேர்தல் கமிஷன் கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக டி.டி.வி.தினகரன் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இடைக்கால மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தங்கள் அணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கட்சி பெயரை வழங்கவேண்டும் என்றும், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தலிலும் போட்டியிடும் வகையில் பிரஷர் குக்கர் சின்னத்தை தங்கள் அணிக்கு ஒதுக்க தலைமை தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீது டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் தலைமை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்தது.

அதில் டி.டி.வி.தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட கட்சி கிடையாது என்பதால் அந்த அணிக்கு கட்சி பெயரை வழங்க முடியாது என்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு சின்னம் ஒதுக்குவது மாநில தேர்தல் கமிஷன் அதிகாரத்துக்கு உட்பட்டது எனவும் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த இடைக்கால மனு மீதான விசாரணை நேற்று டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ரேகா பாலி அமர்வில் நடந்தது. டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் அமித் ஆனந்த் திரிவேதி மற்றும் தலைமை தேர்தல் கமிஷன் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆகியோர் ஆஜராயினர்.

விசாரணை தொடங்கியதும் அமித் ஆனந்த் திரிவேதி வாதிடுகையில், தலைமை தேர்தல் கமிஷன் விசாரணைக்கு ஒரு தினம் முன்பு தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளதால் தங்கள் தரப்புக்கு அது குறித்து எதிர்பதில் மனு தாக்கல் செய்ய போதிய அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் மீதான விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னம் தொடர்பாக பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் 3 நாட்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அந்த மனுவும் 15-ந் தேதியன்று விசாரிக்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 16 =

*