;
Athirady Tamil News

தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு – 250 பேர் படுகாயம்..!!

0

தைவானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்தன. 7 பேர் பலி ஆகினர். 250 பேர் படுகாயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

தைவான் நாட்டில் கிழக்கு கடலோரப்பகுதியில் கரைக்கு அப்பால் 20 கி.மீ. தொலைவில் ஹூவாலியன் நகர் அருகே நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11.50 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது.

நள்ளிரவை நெருங்கி கொண்டு இருந்த நேரத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டபோது, கட்டிடங்கள் குலுங்கின; சரிந்தன; இடிந்தன. தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்தனர்.

அவர்கள் வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் குடும்பம், குடும்பமாக தஞ்சம் அடைந்தனர். எங்கு பார்த்தாலும், மக்களிடையே பெரும் பதற்றமும், பரிதவிப்பும் நிலவியது.

இந்த நில நடுக்கத்தால் ஹூவாலியன் நகரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. 3½ லட்சம் பேர் வசிக்கிற இந்த நகரத்தில் அடுக்கு மாடி கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. பன்னடுக்கு மாடி கட்டிடங்கள் சாய்ந்தன. வணிக வளாகங்கள், ஓட்டல்கள், மருத்துவமனை என எதுவும் பாதிப்புக்கு தப்பவில்லை. பாலங்கள், சாலைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதால் அவை மூடப்பட்டன. மார்ஷல் என்ற 11 மாடி ஓட்டலின் 3 மாடிகள் இடிந்து விட்டன.

இந்த நகரம், சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க புரியாக திகழ்ந்தது. ஒரே நாளில் அது சோகபுரியாக மாறியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் தண்ணீர் இன்றி தவித்தனர்.

நில நடுக்கத்தை தொடர்ந்து 15 முறை கடும் அதிர்வுகள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளி அளவுக்கு பதிவாகி உள்ளன.

இந்த நில நடுக்கம் தலைநகர் தைபேயிலும் உணரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

நில நடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் மீட்பு படையினர் களம் இறங்கினர். அவர்கள் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். குறிப்பாக சாய்ந்த பன்னடுக்கு மாடி கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்பதில் கவனம் செலுத்தினர்.

இந்த நில நடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது, 250 பேர் படுகாயம் அடைந்தனர்; 51 பேரை காணவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

படுகாயம் அடைந்தவர்களில் 14 பேர் தென் கொரியர்கள், 9 பேர் ஜப்பானியர், 2 பேர் செக்கோஸ்லோவேகியா நாட்டினர், 2 பேர் சிங்கப்பூர்வாசிகள், ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நில நடுக்கத்தால் நிலை குலைந்து போய் உள்ள ஹூவாலியன் நகருக்கு தைவான் அதிபர் சாய் இங்க் வென் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதலும், நம்பிக்கையும் தெரிவித்தார். மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் அவர் முடுக்கி விட்டார்.

அதிபர் அலுவலகம் விடுத்து உள்ள செய்திக்குறிப்பில், “தனது மந்திரிகளையும், பல்வேறு துறை அமைச்சகங்களையும் பேரிடர் மேலாண்மை பணிகளை கவனிக்குமாறு அதிபர் உத்தரவிட்டு உள்ளார். முடிந்த அளவுக்கு துரித கதியில் மீட்பு, நிவாரண பணிகளை கவனிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்” என கூறப்பட்டு உள்ளது.

ஹூவாலியன் நகரில், 600 ராணுவ வீரர்கள், 750 தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + one =

*