;
Athirady Tamil News

கிளிநொச்சியைச் சேர்ந்த லக்ஸ்மன் தங்கராசாவுக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு…!! (படங்கள்)

0

தாயகத்தில் யுத்தத்தாலும் இதர அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியமும் கனடா வாழ் உறவுகளும் முனைப்போடு பணியாற்றிவரும் சூழலில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இறுதியுத்தத்தின்போது தனது இரு கால்களையும் இழந்து கை விரல்களையும் இழந்த நிலையில் ஆற்றில் வலை வீசி தாங்கொணாத் துயரங்களைச் சந்தித்து தனது விரல்களை இழந்த மனைவியையும் பெண்பிள்ளைகளையும் காப்பாற்றி வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த லக்ஸ்மன் தங்கராசா என்பவரின் நிலமை பற்றி சமீபத்தில் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்தி வெளியாகியிருந்தது.

இதனை கேள்வியுற்ற கனடாவைச்சேர்ந்த செந்தில் குமரன் நிவாரண நிதியம் ஒரு இலட்சம் செலவில் கோழிக்கூட்டினையும்,கோழிகளையும் வாழ்வாதாரமாக வழங்கினர். இது மட்டுமல்லாது அவருக்கு பல நல்ல உள்ளங்கள் வேறு பல வாழ்வாதார உதவிகளையும் வழங்கியுள்ளனர். இதன் மூலம் இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களையும் விரல்களையும் இழந்த பயனாளியின் வாழ்வாதாரம் வளர்ச்சியுறும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேசத்தைச்சேர்ந்த சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு காலமாகிய அமரர் தங்கையா சந்திரசேகரம் என்பவருடைய குடும்பத்திற்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக 65000 ரூபா பெறுமதியான பசுமாடுகள் செந்தில் குமாரனால் நேரிடையாக வழங்கப்பட்டன.

உண்மையில் கணவன்மார்களை இழந்த பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மிகவும் கடினமான வேலைகளை செய்து தங்களது உடலை வருத்தி தங்கள் பிள்ளைகளை காப்பாற்றும் சூழலில் கனடா செந்தில்குமரன் நிவாரணநிதியம் வழங்கிய வாழ்வாதார உதவியானது தமது வாழ்வாதாரம் சிறக்க வழியாக அமைந்துள்ளது என பாதிக்கப்பட்ட பயனாளி திருமதி சந்திரசேகரம் குறிப்பிட்டு தனது நன்றியினை தெரிவித்தார்.

லக்ஸ்மன் தங்கராசா, திருமதி தங்கராசா, திருமதி சந்திரசேகரம் போன்ற பலர் யுத்தத்தின் காயங்களை சுமந்து வாழ்வியலுக்காக ஏங்கும் சூழலில் புலம்பெயர் உறவுகள் உதவிக்கரம் நீட்டி வாழ்வு வளம் பெற வழிசமைக்கவேண்டும்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 3 =

*