;
Athirady Tamil News

அயோத்தி விவகாரத்தை கோர்ட்டில் நிலப்பிரச்சனையாக அணுக வேண்டும்: தலைமை நீதிபதி கருத்து..!!

0

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு பல்வேறு தரப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லீலா ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.எஸ்.நஜீப் அமர்வு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது. சன்னி வக்பு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த வழக்கில் அரசியல் சிக்கல்கள் உள்ளன. ஒரு கட்சியின் வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே விசாரணையில் அவசரம் காட்டக்கூடாது. வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த மக்களவை தேர்தலுக்குப் பிறகு ஒத்தி வைக்க வேண்டும்” என்று கபில் சிபல் வாதாடினார்.

ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, “பல்வேறு வழக்குகள் அரசியல் பின்னணி கொண்டவை. அதற்காக அந்த வழக்குகளின் விசாரணை ஒத்திவைக்கப்படவில்லை. அயோத்தி வழக்கு விசாரணையை 2019 ஜூலைக்கு பிறகு ஒத்திவைக்க கோருவது ஏற்கத்தக்கது அல்ல” என்று வாதிட்டனர். இதனை அடுத்து இவ்வழக்கின் இறுதி விசாரணை இன்று (பிப்.8) நடக்கும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

இன்று வழக்கு விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய இடத்தில் மருத்துவமனை கட்டவேண்டும் என ஷியாம் பனேகல் என்பவர் தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி தள்ளுபடி செய்தார். இவ்வழக்கு விசாரணையில் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லீலா ஆகிய மூன்று தர்ப்பை தவிர புதிதாக எந்த அரசியல் கட்சிகளோ, இயங்கங்களோ உள்ளே நுழைய கூடாது என தலைமை நீதிபதி கூறினார்.

இவ்வழக்கை வெறும் நிலப்பிரச்சனையாக மட்டுமே அனுகவேண்டும் எனவும், நீதிமன்றம் அவ்வாறே அணுகுவதாகவும் நீதிபதி கருத்து கூறினார். மேலும், இவ்வழக்கு தொடர்பான வீடியோ ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் மற்றும் ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 11 =

*