2017-ல் நடந்த சாலை விபத்துகளில் 1.46 லட்சம் மக்கள் உயிரிழப்பு: கட்காரி தகவல்..!!

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது எழுப்பிய கேள்விக்கு சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பதிலளித்து பேசியதாவது:-
நாடு முழுவதிலும் 2017-ம் ஆண்டில் மொத்தம் 4.60 லட்சம் சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில், 1.46 லட்சம் மக்கள் மரணம் அடைந்துள்ளனர். 2016-ம் ஆண்டில் 4.80 லட்சம் விபத்துக்களில் 1.50 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். 2015-ல் 5.01 லட்சம் விபத்துக்களில் 1.46 லட்சம் மக்கள் இறந்துள்ளனர்.
வயது வாரியாக கணக்கிடும்போது, 2016-ல் நடந்த விபத்தில் மரணம் அடைந்தவர்களில், 18 முதல் 45 வயது வரையிலான நபர்கள் 68.6 சதவீதம் பேர் உள்ளனர்.
இதுபோன்ற சாலை விபத்துக்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக தேசிய சாலை பாதுகாப்பு கொள்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு விஷயங்களில் கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சிலை மத்திய அரசு அமைத்துள்ளது. இதேபோன்று சாலை பாதுகாப்பு கவுன்சில் அமைக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.