;
Athirady Tamil News

மே 6-ந்தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்..!!

0

பிளஸ்-2 தேறிய மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு வருகிற மே மாதம் 6-ந்தேதி நாடு முழுவதும் நடைபெறும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆன்லைன் மூலம் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். நேற்று காலை 7 மணிக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது. வருகிற மார்ச் 9-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 10-ந்தேதி நள்ளிரவு 11.30 மணிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சீபுரம், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, நாமக்கல், திருவள்ளூர், வேலூர் என 10 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது.

நாடு முழுவதும் மொத்தம் 150 தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் இல்லை என்றால் பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிடலாம். நீட் தேர்வுக்கு மாணவர்களின் வயது வரம்பு 17 முதல் 25 வரை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான கட்டணம் பொதுப் பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.1,400-ம், மற்ற இனத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து கொள்குறி தேர்வு முறையில் (நான்கு விடை கொடுத்து சரியான ஒன்றைத் தேர்வு செய்யும் முறை) 180 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பாடத்திட்ட விவரங்கள் சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள நீட் தேர்வு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன.

தேர்வுக்கான கேள்வித்தாள் தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, ஒரியா, தெலுங்கு, உருது என 10 மொழிகளில் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்கும் போதே மாணவர்கள் குறிப்பிட வேண்டும்.

தேர்வுக்கான அனுமதி சீட்டு ஏப்ரல் 2-வது வாரத்தில் சி.பி.எஸ்.இ. இணைய தளத்தில் வெளியிடப்படும். இதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ந்தேதி வெளியிடப்படும்.

நீட் தேர்வில் அகில இந்திய அளவில் மாணவர் எடுக்கும் அதிகபட்ச மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொண்டு நீட் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை சி.பி.எஸ்.இ. நிர்ணயிக்கும்.

தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் 600 என்றால் அது 100 சதவீத மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்படும். அடுத்த மதிப்பெண் 569 என்றால் அது 99-வது சதவீத மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறான மதிப்பெண் நிர்ணயத்தில் பொதுப் பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் 50-வது சதவீத இடத்தை பிடித்திருக்க வேண்டும். இல்லையெனில் நீட் தேர்வில் தகுதிபெற முடியாது.

மாற்றுத்திறனாளிகள் குறைந்தபட்சம் 45-வது சதவீத இடத்தையும், எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் 40-வது சதவீத இடத்தையும் பெற வேண்டும். இந்த கணக்கீடு முறையில் சி.பி.எஸ்.இ. தரவரிசைப் பட்டியலைத் தயார் செய்து மத்திய சுகாதார சேவைகள் இயக்குனர் அலுவலகத்துக்கும், மாநில அரசுகளுக்கும் வழங்கும்.

இதன் அடிப்படையில் மத்திய சுகாதார சேவைகள் இயக்குனரகம், மருத்துவ கலந்தாய்வு குழு மூலம் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்று இருக்கும் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று கலந்தாய்வு மூலம் நிரப்பும்.

மாநில அரசுகள் அவற்றிடம் உள்ள மருத்துவ இடங்களுக்கு இந்த தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் துண்டுக் காகிதம், பேனா, பென்சில் பாக்ஸ், ரப்பர், பிளாஸ்டிக் பவுச், பென் டிரைவர், கால்குலேட்டர், செல்போன், புளூடூத், இயர்போன், கைப்பை போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது.

இதேபோல் பெல்ட் தொப்பி அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், நெக்லஸ், டாலர், பேட்ச், பிரேஸ்லெட் போன்ற உலோக பொருட்கள் அணிந்து செல்லக் கூடாது. குடிநீர் பாட்டில் போன்ற சாப்பாட்டு பொருளும் எடுத்துச் செல்லக்கூடாது.

தேர்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் லேசான அரைக் கை வைத்த ஆடைகள் மட்டுமே அணிந்து செல்ல வேண்டும். காலில் ஷூ அணியக் கூடாது. செருப்புகள் மட்டுமே அணிந்து செல்ல வேண்டும். அதுவும் குறைந்த ஹீல்ஸ் உள்ள செருப்புகளையே அணிய வேண்டும்.

மாணவர்கள் தேர்வு முடிந்த பிறகு மருத்துவ படிப்புகளில் சேரும் வரை சில ஆவணங்களை தங்களுடன் வைத்திருப்பது நல்லது என சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி தேர்வுக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான உத்தரவாத பக்கத்தின் 3 நகல்கள், தேர்வு கட்டணம் செலுத்தியதற்கான சான்று, விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படத்தைப் போல் 5 மார்பளவு புகைப்படங்கள், தேர்வறை அனுமதிச் சீட்டு ஆகிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 4 =

*