;
Athirady Tamil News

2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக்கொன்றது ஏன்?- தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய் எழுதிய கடிதம் சிக்கியது..!!

0

கரூர் ஆண்டாங்கோவில் புதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 28). இவர் கரூர் அருகே புகளூர் காகித ஆலையில் மனித வள பிரிவில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்களது மகள் யாழினி (6), மகன் பிரனித்(2). யாழினி ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.படித்து வந்தாள்.

நேற்று காலை விஜயலட்சுமி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு மூலிமங்கலத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மதியம் வீட்டின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றுக்கு குழந்தைகளுடன் சென்ற அவர், திடீரென 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டு அவரும் கிணற்றுக்குள் குதித்து விட்டார்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தண்ணீரில் தத்தளித்த 3 பேரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தைகள் யாழினி, பிரனித் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விஜயலட்சுமிக்கு டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விஜயலட்சுமி , குழந்தைகளை கிணற்றில் தள்ளிக்கொன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயலட்சுமி வேலை பார்த்து வந்த காகித ஆலை அலுவலகத்தில் உயர் அதிகாரி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரை விஜயலட்சுமி மற்றும் சக ஊழியர்கள் சிலர் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்று அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்து ஊர் திரும்பினர். இதில் சோர்வாக இருந்ததால் விஜயலட்சுமி நேற்று காலை பணிக்கு செல்லவில்லை.

மேலும் நேற்று முன்தினம் இரவு விஜயலட்சுமிக்கும் அவரது கணவர் ஜெயக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்து கொண்ட விஜயலட்சுமி, குழந்தைகளை அழைத்து கொண்டு மூலிமங்கலத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் அவர் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாகவே விஜயலட்சுமி இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே விஜயலட்சுமி எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எனக்கு பிறகு எனது குழந்தைகள் அனாதையாகிவிடுவார்கள் என்பதால் அவர்களையும் என்னுடன் அழைத்து செல்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*