;
Athirady Tamil News

இதுவரை வெளியாகிய முடிவுகளின்படி, மஹிந்தவுக்கு 222; ரணிலுக்கு 41; கூட்டமைப்புக்கு 34; மைத்திரிக்கு 10

0


ஸ்ரீலங்காவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இதுவரை வெளியாகிய முடிவுகளின்படி பௌத்த மக்கள் நெறிவாக வாழ்கின்ற தென்னிலங்கையில் மட்டுமன்றி பல இடங்களிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 222 சபைகளைக் கைப்பற்றி தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 41 சபைகளைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தையும், இலங்கை தமிழரசுக் கட்சி 34 சபைகளைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

ஸ்ரீலங்காவில் கடந்த இரண்டு வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டுவந்த 340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

ஒருசில வன்முறைகளுக்கு மத்தியிலும் பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் நடைபெற்ற இந்தத் தேர்தல் முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் வெளியிடப்பட்டு வந்தன.

இதற்கமைய வெளியாகிய முடிவுகளின் படி ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி ஆகிய பிரதான கட்சிகளைப் பின்தள்ளி மகிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகமான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் 10 சபைகளைக் கைப்பற்றியுள்ளன.

இவை தவிர, சுயேற்சைக் குழுக்கள் 5 சபைகளையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 5 சபைகளையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 சபைகளையும் கைப்பற்றியுள்ளன.

இதுதவிர, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஒரு சபையையும், தேசிய காங்கிரஸ் ஒரு சபையையும் கைப்பற்றியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − four =

*