;
Athirady Tamil News

ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்துக்கு மட்டுமே தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் – துபாயில் மோடி பேச்சு..!!

0

பாலஸ்தீன பயணத்தை நிறைவுசெய்து துபாய் நகருக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு இன்று நடைபெற்ற உலக அரசு உச்சிமாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்த மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் நாட்டின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ரஷித் அலி மக்தூம் உள்பட சுமார் 140 நாடுகளை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த உச்சிமாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது எனக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களுக்கும் கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

உலகில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டும், வறுமையும், ஊட்டச்சத்து குறைவும் இன்னும் ஒழிக்கப்படவில்லை. அதேவேளையில், மற்றொருபுறம் நாம் பெரும்பகுதி பணத்தையும், நேரத்தையும் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்துகிறோம்.

உலக மக்கள்தொகையில் 9.5 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து வருகின்றனர். அபரிமிதமான மக்கள்தொகை பெருக்கத்துக்கு இடையில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், கல்வி, வீட்டுவசதி போன்ற சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இவற்றை எல்லாம் நாம் முன்னேற்றத்தின் மூலம் கடந்து வந்து விடலாம். எனது தலைமையிலான அரசாங்கம் தொழில்நுட்பத்தை இதற்காகதான் பயன்படுத்துகிறது.

தொழில்நுட்பத்தின் உதவியால் பாலைவனமாக இருந்த துபாய் இன்று அற்புதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. வளைகுடா அமீரகம் இந்த உலகத்துக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது. ஆனால், சிலர் தற்கால சைபர் தொழில்நுட்பத்தை மதம்சார்ந்த குரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றனர். தொழில்நுட்பத்தை அழிவுப்பாதைக்கு உபயோகிக்காமல் ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்துக்கு நாம் பயன்படுத்த வேண்டும்.

இந்திய மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால் தொழில்நுட்பத்தின் வாயிலாக இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் புதிய இந்தியா என்னும் அவர்களின் கனவை நனவாக்க முடியும்.

தொழில் மற்றும் வர்த்தக வாய்ப்புகளில் இந்தியா முன்னோடி நாடாக திகழ்வதற்கு தேவையான தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். வரும் 2022-ம் ஆண்டுக்குள் எங்கள் நாட்டு விவசாயிகளின் வருமானம் இருமடங்காக பெருகிவிடும்.

கற்காலத்தில் இருந்து தொழில் புரட்சி யுகத்துக்கு நாம் பயணம் செய்ய பல்லாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், அங்கிருந்து தகவல் தொழில்நுட்ப புரட்சி காலத்துக்குவர 200 ஆண்டுகள் மட்டுமே ஆனது. அதைதொடர்ந்து, வெகுசில ஆண்டுகளில் நாம் டிஜிட்டல் புரட்சிக்குள் நுழைந்து விட்டோம்.

குறைந்த அரசாங்கத்தை கொண்டு சராசரி மக்களுக்கு நிறைவான ஆட்சியை அளிக்கும் மின்னணு ஆட்சி நிர்வாக முறையையும், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வசதியையும் தொழில்நுட்பம் நமக்கு சாத்தியப்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 10 =

*