;
Athirady Tamil News

தன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு தனது கண்ணையே கொடுத்த தாய்..!!

0

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் தாமரைக்குளம் கொட்டைக்காட்டுசேரி பகுதியை சேர்ந்தவர் ராஜப்பன். இவரது மனைவி ரமாதேவி (வயது 50). இவர்களுக்கு கோகுல் (27), ராகுல்ராஜ் (25) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவரது மூத்தமகன் கோகுல் 6 வயதாக இருந்த போது வீட்டில் வளர்த்த பசுவில் ரமாதேவி பால் கறந்தார். அப்போது கோகுல் அருகில் விளையாடினார். திடீரென பசுமாடு கயிற்றை அறுத்துக்கொண்டு தாறுமாறாக ஓடியது. தறிகெட்டு ஓடிய பசு அங்கிருந்த கோகுல் மீது ஆவேசமாக பாய முயன்றது.

மகனை காப்பாற்ற ரமாதேவி அருகில் கிடந்த கற்களை எடுத்து மாட்டின் மீது எறிந்தார். ஒரு கல் மாடு மீதும் மற்றொரு கல் மகன் மீதும் பட்டது. மாடு மீது பட்டகல்லால் மாடு வேறுபக்கம் ஓடியது. மகன் மீது பட்ட கல் அவரின் இடது கண்ணை சிதைத்தது.

அலறி சத்தம்போட்டு மயங்கிய மகனை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றார். கோகுலை பரிசோதனை செய்த டாக்டர் இடது கண் முற்றிலும் சிதைந்து பார்வை பறிபோய் விட்டது. மாற்றுக்கண் தான் பொருத்த வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து மகனுக்கு பார்வை வேண்டும் என்று கண் வங்கி மற்றும் சமூக அமைப்புகளிடம் பதிவு செய்தார். ஆனால் கண் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மகனின் பார்வை பறிபோனதை எண்ணி தாய் குற்ற உணர்வில் வருந்தினார். இருந்தாலும் மகன் மீது கூடுதல் பாசம் வைத்து வளர்த்து வந்தார். மகனும் கண் பார்வை பறிபோனதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பி.எஸ்.பி. நர்சிங் முடிந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று தனது 2-வது மகன் ராகுல்ராஜூடன் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் ஒரு வளைவில் திரும்பியபோது ரமாதேவி தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆழப்புலா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரமாதேவி பரிதாபமாக இறந்தார்.

அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கீதுவிடம் குடும்பத்தினர் கோகுலின் கண்பார்வை பறிபோன நிலையை கூறி ரமாதேவியின் கண்ணை தானமாக பெற்று மகனுக்கு பொருத்த முடியுமா? என்று கேட்டனர்.

ரமாதேவியின் கண்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது கண் ஆரோக்கியமாக உள்ளது. அவரது கண்ணை மகனுக்கு பொருத்தலாம் என்று கூறினர். இதனையடுத்து தாயின் கண்ணை எடுத்து மகனுக்கு பொருத்தப்பட்டது. அதன்பின்னர் ரமாதேவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*