;
Athirady Tamil News

வழிதவறிச் சென்று தொலைந்த மனைவியை 1 மாதமாக சைக்கிளில் சுற்றி மீட்ட தொழிலாளி..!!

0

போக்குவரத்து வசதிகளும், தகவல் தொழில் நெட்ப முன்னேற்றமும் அதிநவீனம், அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் காணாமல் போன மனைவியை சைக்கிளிலேயே கணவர் தேடிய சம்பவம் நடந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் பாலியகோடா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் நாயக். இவர் ஒடிசா மாநிலத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அங்குள்ள கும்ரசோலே கிராமத்தில் மனைவி அனிதா மற்றும் 14 வயது மகனுடன் தங்கி இருந்தார். அந்த கிராமம் அவர்களுக்கு புதியது என்பதால் சம்பவத்தன்று வெளியே சென்ற அனிதா வழி தவறி வேறு பாதையில் சென்று விட்டார். அவர் திரும்பி வரவில்லை.

அவர்கள் தங்கி வேலை செய்து வந்த அந்தப் பகுதி ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய 3 மாநில எல்லை என்பதால் அனிதா நடந்தே மேற்கு வங்காள மாநிலம் சென்று விட்டார்.

மனைவி திரும்பி வராததால் துடித்துப் போன கணவர் மனோகருக்கு போலீசில் புகார் செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. பஸ்சில் சென்று தேட பணமும் இல்லை. சைக்கிளில் மனைவியைத் தேடினார். எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமம் கிராமமாக சைக்கிளிலேயே தேடி அலைந்தார்.

மனைவியின் ஒரே ஒரு போட்டோ மட்டும் இருந்தது. ‘‘அதை கையில் வைத்துக் கொண்டு இவரைப் பார்த்தீர்களா?’’ என்று கிராமத் தினரிடம் விசாரித்து வந்தார். எல்லோரும் பார்க்கவில்லை என்று தெரிவித்தனர்.

போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தால் பலருக்கு தெரிந்து இருக்கும். ஆனால் வாட்ஸ்- அப்பற்றி அவருக்கு தெரிந்திருக்கவில்லை. இறுதியில் சிலரது உதவியுடன் பத்திரிகையில் மனைவி படத்தை போட்டு விளம்பரப்படுத்தினார்.

மேற்கு வங்க மாநிலம் காரக்பூரில் அனிதா சுற்றித்திரிந்த போது அங்குள்ள பத்திரிகையில் அவரது படம் வெளியானதைப் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து அனிதாவை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வைத்து விசாரித்த போது கணவர் பற்றி தகவல் தெரிவித்தார். உடனே மேற்கு வங்க போலீசார் ஜார்க்கண்ட் போலீசாருடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே மனோகர் 65-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு மாதமாக தேடிய பின்பு சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் டில் தேடினார். மனைவி போட்டோவை வைத்து தேடுவதை அறிந்த ஜார்க்கண்ட் போலீசார் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் வைத்திருந்த போட்டோவும், மேற்கு வங்க போலீசார் அனுப்பிய போட்டோவும் ஒன்று போல் இருந்தது. இதையடுத்து மனோகரை மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு இருந்த மனைவியைப் பார்த்ததும் கணவர் ஆனந்த கண்ணீர் விட்டார். மனைவியை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். இதுபற்றி மனோகர் கூறுகையில், நான் மனைவியைத் தேடி கிராமம் கிராமமாக ஒரு மாதத்துக்கும் மேலாக தேடி அலைந்தேன். மனைவி கண்டிப்பாக கிடைப்பாள் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். எனது நம்பிக்கை வீண் போகவில்லை. மனைவி கிடைத்து விட்டாள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*