தமிழ் மக்களுடைய நலன்கருதி தமிழ் தலைமைகள் சுயநலத்தை கைவிட்டு ஒன்றிணைய வேண்டும், வ.மா.உ. அறைகூவல்…!!

தமிழ் மக்களுடைய நலன்கருதி தமிழ் தலைமைகள் சுயநலத்தை கைவிட்டு ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.தியாகராஜ தெரிவித்தார்.
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று (15) நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்pலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ப.தியாகராஜா
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டு பல நாட்களாகியும் தமிழ் தலைமைகள் சபைகளை அமைத்து ஆட்சி நடத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
தமிழ் தலைமைகள் மீதான வெறுப்பே தமிழ் மக்கள் இதுவரைகாலமும் இல்லாத அளவுக்கு தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்துள்ளமையானது காரணமாக இருக்கிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணி தனியாக தேர்தலில் நின்றபடியால் அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.
இல்லாவிட்டால் அந்த வாக்குகள் கூட தேசியகட்சிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும். தமிழ் தலைமைகள் எங்களுடைய கதவு திறந்திருக்கிறது என சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் ஒன்றாக செயல்படுவதற்கு முன் வருகிறார்களில்லை. தமிழ் கட்சிகள் ஒன்றிணையாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.
தமிழ் மக்கள் என்ன காரணத்திற்காக வாக்களித்தார்கள் என்பதை தமிழ் தலைமைகள் உணராமல் மௌனம் காப்பது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே பார்க்கிறேன். தமிழ் தலைமைகள் ஒன்றிணையாவிட்டால் தேசிய கட்சிகள் ஆட்சி அமைக்கும் நிலைமையே காணப்படுகின்றது.
மன்னார் முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் தேசிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி ஆட்சியை கைப்பற்ற முனைப்புக்காட்டும் இவ்வேளையில் தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு பிரதேச சபைகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
தமிழர்களுடைய நலன்கருதி தமிழ் தலைமைகள் சுயநலத்தை கைவிட்டு ஒன்றிணைய வேண்டும் அவ்வாறு இல்லாத விடத்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தமிழ் தலைமைகளை முற்றுமுதாக நிராகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என எச்சரித்த ப.தியாகராஜ மகிந்த ராஜபக்சவைப்பற்றி பேசிக்கொண்டிருக்காமல் தமிழ் தலைமைகள் ஐக்கியபட்டு செயற்பட முன் வரவேண்டும்.
கட்சிக்குள் தங்கள் தலைமைகளை காப்பாற்றுவதற்காக தமிழ் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்.
தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் தேசியத்தையும் வென்றெடுப்பதற்கு ஒன்றுபடவேண்டும் என தெரிவித்தார்.