;
Athirady Tamil News

செயின் பறிப்பு கொள்ளையர்களால் பீதியில் தவிக்கும் பெண்கள்..!!

0

சென்னையை பொறுத்த வரையில் எப்போதுமே பரபரப்பான குற்றச் சம்பவங்களுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை.

எது நடந்தாலும் தொடர்ச்சியாக நடந்து பீதியை ஏற்படுத்துவது என்பது வாடிக்கையாகவே மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பீரோ புல்லிங் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். வடபழனி பகுதியில் சைகோ கொலையாளி ஒருவன் சாலையோரம் தூங்குபவர்களை போட்டுத்தள்ளிக் கொண்டே இருந்தான்.

இப்படி எந்த குற்றச் சம்பவங்களாக இருந்தாலும் பொது மக்களை பீதியில் ஆழ்த்தும் வகையிலேயே அரங்கேறி வந்துள்ளன. அந்த வரிசையில் இப்போது செயின் பறிப்பு சீசன் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் குறைந்தது 10 பெண்களாவது தங்களது தாலிச்செயினை பறி கொடுக்க வேண்டும் என்பது இப்போது தலைவிதியாகவே மாறிப் போய் இருக்கிறது.

இரவு நேரங்களில் மட்டுமின்றி, பட்டப்பகலிலும் செயின் பறிப்பு கொள்ளையர்கள் மிகவும் துணிச்சலுடன் கைவரிசை காட்ட தொடங்கி உள்ளனர். இதனால் வெளியில் தலை காட்டுவதற்கே பெண்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியாக நடந்து செல்லும் பெண்களை மட்டுமே குறிவைத்த கொள்ளையர்கள் கணவனுடன் நடந்து செல்லும் பெண்கள் மீதும் கை வைக்க தொடங்கியுள்ளனர்.

குன்றத்தூரை அடுத்த 2-ம் கட்டளை ராகவேந்திரா நகர் பகுதியில் நடந்த துணிச்சலான செயின் பறிப்பு சம்பவங்களே இதற்கு சாட்சி. 60 வயதான தனது கணவர் அசோக்குமாருடன் நடந்து சென்ற ஜெயஸ்ரீ என்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களில் ஒருவர் செயினை பறித்த காட்சியும் வீடியோவாக வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையனை பின்னால் துரத்தி சென்ற அசோக்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்ததும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே அரும்பாக்கம் ஜெய் நகரில் வண்ணாரப் பேட்டையை சேர்ந்த மேனகா என்ற பெண்ணிடம் 13 சவரன் ஜெயின் பறிக்கப்பட்ட சம்பவமும் வீடியோ காட்சிகளாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த 2 சம்பவங்களும் நடைபெற்ற சில நாட்களில் செயின்பறிப்பு கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதலிலும் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த லாவண்யா ஜனத் என்ற 30 வயது இளம்பெண் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பின்னால் வந்த கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் தலையில் திடீரென தாக்கினர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயக்கமானார்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத கொள்ளையர்கள் ஈவு இரக்கமின்றி அவர் அணிந்திருந்த செயின், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் அவரது மொபட்டையும் திருடி சென்றனர்.

இந்த 3 சம்பவங்களும் அடுத்தடுத்து பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017-ம் ஆண்டில் செயின் பறிப்பு குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இது போன்ற சம்பவங்கள் பெண்களை பீதியில் உறைய வைத்துள்ளது.

இதன் காரணமாக தனியாக நடந்து செல்லும் பெண்கள் தங்களை யாரும் பின் தொடர்கிறார்களா? என்பதை கண்காணித்த படியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே செயின் பறிப்பு கொள்ளையர்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. செயின் பறிப்பு நடைபெற்றவுடன் சம்பவ இடங்களுக்கு செல்லும் போலீசார் முதலில் கேட்கும் கேள்வி இதுதான். ஏன் இவ்வளவு பெரிய செயினை போட்டு கொண்டு செல்கிறீர்கள். செயினை வெளியில் தெரியாமல் மூடிக்கொண்டு செல்ல வேண்டியது தானே என்பது போன்ற கேள்விகளை பெண்களிடம் கேட்கிறார்கள். அதன் பின்னரே செயின் பறிப்பு பற்றிய விசாரணையை தொடங்குகிறார்கள்.

செயின் பறிப்பு கொள்ளையர்களிடம் இருந்து பெண்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று பாடம் எடுக்கும் போலீசார் அதனை தடுத்து நிறுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சென்னையில் செயின் பறிப்பு கொள்ளையர்களின் கொட்டத்தை அடுக்க முடியும்.

இதுதொடர்பாக சென்னை போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க ரோந்து பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கேமராக்கள் இல்லாத இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் வலியுறுத்தி உள்ளோம். செயின் பறிப்பில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

இதனை வெறும் பேச்சோடு நிறுத்திவிடாமல் செயலிலும் காட்ட வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 3 =

*