காஷ்மீரில் வான் சாகசத்தில் ஈடுபட்ட ரஷ்ய வீரர் பனிச்சரிவில் சிக்கி பலி..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்மார்க் பகுதியில் உலக புகழ்பெற்ற வான் சாகசம் செய்யும் ரிசார்ட் உள்ளது. இங்கு உலகிலுள்ள அனைத்து நாடுகளை சேர்ந்த வான் சாகச வீரர்கள் பயிற்சி பெறுவது வழக்கம்.
இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவுக்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வீரர்கள் யாரும் வான் சாகசத்தில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில், குல்மார்க் ரிசார்டில் ரஷ்ய வீரர்கள் ஐந்து பேர் இன்று காலை வான் சாகசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பனிச்சரிவு ஏற்பட்டதால், ஐந்து பேரும் பனியில் சிக்கி புதைந்தனர்.
தகவலறிந்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று புதைந்தவர்களை மீட்டனர். இதில், ஒரு வீரர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மேலும், பனிச்சரிவில் புதைந்து கிடந்த 4 வீரர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கடந்த 8-ம் தேதி இதே பகுதியில் வான் சாகசத்தில் ஈடுபட்ட ஸ்வீடன் வீரர் பலியானார். மேலும், ஒருவரை மீட்பு படையினர் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.