;
Athirady Tamil News

காவல் துறையில் பெண்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு – கர்நாடக பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிப்பு..!!

0

கர்நாடக சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 11.40 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது.

2018-19-ம் ஆண்டுக் கான கர்நாடக பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்) சட்டசபையில் நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்- மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார். அவர் சட்டசபையில் முதல்-மந்திரி பதவியில் இருந்து கொண்டு தொடர்ச்சியாக பட்ஜெட் தாக்கல் செய்வது இது 6-வது முறையாகும்.

அதற்கு முன்பு அவர் நிதித்துறை மந்திரியாக இருந்தபோது 7 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். நடப்பு சட்டமன்றத்தில் சித்தராமையா அரசின் கடைசி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் மட்டுமே இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய சித்த ராமையா பல்வேறு புதிய திட்டங்கள், சலுகைகளை அறிவித்தார்.

இந்த பட்ஜெட்டில் மதுபானங்கள் மீதான வரி உயர்வை தவிர்த்து மற்ற வரிகள் எதுவும் உயர்த்தப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு வழங்குமாறு 6-வது ஊதிய குழு பரிந்துரை செய்துள்ளது, பெங்களூருவில் 105.55 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்குவது உள்பட பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜப்பான் அரசு வழங்கியுள்ள உதவியை அடிப்படையாக கொண்டு பெங்களூருவில் முக்கியமான பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிர்வாக நடைமுறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர், விதவைகள், சந்தியா சுரக்‌ஷா, மனஸ்வினி, கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.500-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்படுவதாகவும், இதன் மூலம் 48 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சரக்கு வாகனங்களை நிறுத்த வசதியாக பெங்களூரு அருகே 400 ஏக்கர் பரப்பளவில் பல்நோக்கு வசதிகளை கொண்ட வாகன நிறுத்தம் அமைப்பது, போலீஸ் துறையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 25 சதவீதமாக உயர்த்துவது, காவலர்களை நியமனம் செய்யும் பணிகளை மேற்கொள்ள போலீஸ் பணியாளர்கள் நியமன ஆணையம் அமைப்பது என்று புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

பள்ளி-கல்லூரி மாணவர் களுக்கு வழங்கப்படும் சலுகை கட்டண பஸ் பாஸ் இலவசமாக வழங்கப்படும் என்றும், இதனால் 19.60 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் பெறுவார்கள் என்றும் பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூருவில் 1,000 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதாகவும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மீதான சுங்கவரி 8 சதவீதம் உயர்த்தப்படும் என்றும் சித்தராமையா அறிவித்து உள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலை மனதில் நிறுத்தி சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

சித்தராமையாவின் பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள பிற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இட ஒதுக்கீட்டின் பலனை பெற ‘கிரிமிலேயர்’ அதாவது வருமான உச்ச வரம்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

* சவிதா, திகளர், மடிவாளா, கும்பாரா ஆகிய சமூகங்களின் பொருளாதார நிலையை உயர்த்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* நிலம் இல்லாத தேவதாசிகளுக்கு நிலம் வாங்கி கொள்ளவும், கடன் பெறவும் உதவி செய்யப்படும்.

* ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட தேசிய கல்வி நிறுவனங்களில் பயிலும் கர்நாடக மாணவர் களுக்கு ஒரு முறை வழங்கப்படும் நிதி உதவி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.

* தீண்டாமையை அறவே அகற்ற வேறு சமூகங்களை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் தலித் ஆணுக்கு ஊக்கத்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும், வேறு சமூகங்களை சேர்ந்த ஆண் மகனை திருமணம் செய்து கொள்ளும் தலித் பெண்ணுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

* நிலம் ஒதுக்கீடு உள்பட அரசின் திட்டங்களில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

* பெங்களூரு கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.15 கோடி செலவில் பி.இ.டி., சி.டி. ஸ்கேன் மையம் அமைக்கப்படும்.

* 9,000 சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்படும். 5 ஆயிரம் மக்கள்தொகை உள்ள பகுதிகளில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

* குழந்தைகளின் பாதுகாப்பை கருதி அரசு பள்ளிகளில் படிப்படியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

* 100 ஆண்டுகளை கடந்த 100 அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை பாரம்பரிய பள்ளிகளாக கருதி அவை மேம்படுத்தப்படும்.

* வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பவர்களுக்கு தற்போது நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் குடும்பத்தினருக்கு மாத உதவித்தொகையாக ரூ.2,000 வீதம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

* இந்திரா உணவகம் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.

* நீர்ப்பாசனத்துறைக்கு ரூ.15 ஆயிரத்து 998 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* தலா ரூ.10 லட்சம் செலவில் 10 மீன் பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படும்

* பெண் மீனவர்களுக்கு தற்போது 2 சதவீத வட்டியில் ரூ.50 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த வட்டி முழுமையாக நீக்கப்பட்டு பூஜ்ஜிய வட்டியில் பெண் மீனவர்களுக்கு கடன் வழங்கப்படும்.

* கார்வார் மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் ரூ.1 கோடியில் அமைக்கப்படும்.

* ஆடு வளர்ப்பு தொழிலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படும். தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தில் விவசாயிகள் ஆடு வளர்ப்புக்கு ரூ.187 கோடி கடன் பெற அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்படும்.

* கர்நாடகத்தில் 4 ஆயிரம் ஆட்டு மந்தை குழுக்கள் உள்ளன. இந்த குழுக்கள் குறிப்பிட்ட கால இடைவேளையில் இடம் மாறிக்கொண்டே இருக்கும். இதற்கு வசதியாக அவர்களுக்கு தற்காலிக கூடாரம், இரும்பு கம்பி, வேலி உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்து கொடுக்கப்படும்.

இவை உள்பட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்று இருந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*