;
Athirady Tamil News

இப்படியும் ஒரு அரசியல்வாதி – பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்தவர்..!!

0

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கஜ்ராஜ் சிங் ஜடேஜா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் மரணம் அடைந்த போது திருமணமாகாத கோடீஸ்வரரான அவரிடம் 40 ஆண்டுகளாக வேலை செய்து வந்த வினு பாய் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜடேஜாவின் பங்களாவை விட்டு வெளியேறி, வேறு யாரிடம் போய் வேலை தேடுவது என்று போக்கிடம் தெரியாமல் திண்டாடி வந்தனர்.

இந்நிலையில், கஜ்ராஜ் சிங் ஜடேஜா இறந்த சில நாட்களுக்கு பின்னர் அவரது உறவினர்கள் 8 பேர் ஒரு காரில் வினு பாயின் வீட்டிற்கு வந்தனர். என்ன நடக்கிறது? என்பதை யூகிப்பதற்குள் அவரை குண்டுகட்டாக தூக்கி காரில் போட்ட கும்பல் அவரை ஒரு ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றது.

தனக்கு பின்னால் நேர் வாரிசு என்று யாருமே இல்லாத ஜடேஜா, அவருக்கு சொந்தமான சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், வீடு, பங்கு பத்திரங்கள், தங்க, வைர நகைகள், வங்கியில் உள்ள சேமிப்பு பணம் ஆகிய அனைத்தையும் வேலைக்காரனான வினு பாய்க்கு உயிலாக எழுதி வைத்து கடந்த 2014-ம் ஆண்டு இறந்து விட்டதாகவும், அவற்றை தங்கள் பெயருக்கு மாற்றி எழுதி தர வேண்டும் என்றும் அந்த கும்பல் வினு பாயை அடித்து, உதைத்து, சித்ரவதை செய்து சில வெற்று பத்திரங்களில் கையெழுத்திடுமாறு வற்புறுத்தியது.

இதற்கிடையில், தனது தந்தையை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று விட்டதாக வினு பாயின் மகன் போலீசில் புகார் அளித்தார். விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார், கடத்திச் சென்றவர்களின் பிடியில் இருந்து வினுபாயை மீட்டு 8 பேரையும் கைது செய்தனர்.

கடத்தல்காரர்களிடம் இருந்து விடுபட்ட அதிர்ச்சியை விட, இவ்வளவு பெரிய தொகை தனக்கு உயில் மூலமாக கிடைத்த இன்ப அதிர்ச்சியில் உறைந்துப் போன வினு பாய், மறைந்த ஜடேஜா பற்றி கூறுகையில் ‘அவரிடம் நான் வேலைக்கு சேர்ந்த பிறகு எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். என் பிள்ளைகளை தனது பிள்ளைகளாகவே கருதி, அன்பு செலுத்தி, உயர் கல்விக்காக இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்க வைத்தார்.

அந்த நன்றி கடனை எப்போது அடைப்பது? என்பது தெரியாமல் நாங்கள் குழம்பிப்போய் இருந்த வேளையில் எதிர்பாராத விதமாக அவர் எங்களை விட்டு மறைந்து விட்டார். இந்த நிலையில் 600 கோடி ரூபாய் சொத்துக்களை எங்களுக்கு எழுதி வைத்து விட்டு, ஏழேழு தலைமுறையினரும் எப்போதுமே தீர்க்க முடியாத நன்றிக் கடனை எங்களுக்கு அவர் விட்டு சென்றுள்ளார்’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இப்படி ஒரு அரசியல்வாதியையும், விசுவாசம் மிக்க பணியாளர்களை இந்த தலைமுறையினர் இனி பார்க்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 14 =

*