;
Athirady Tamil News

நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வோம் – அமைச்சர் ஜெயக்குமார்..!!

0

பிரதமர் மோடி கூறியதால் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்ததாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வோம். அதையேதான் துணை முதல்-அமைச்சரும் செய்து உள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராய கல்லூரியில் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் பட்டதாரிகளுக்கு தனியார் துறையில் வேலை பெற்றுத்தரும் முகாம் நடைபெற்றது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெற்ற 168 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

இதில் வெங்கடேஷ் பாபு எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் மீனாட்சி, தியாகராய கல்லூரி முதல்வர் ரவிசந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஜெயக் குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு மூலம் நடத்தும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் இதுவரை சுமார் 2.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாம் சென்னையை தவிர்த்து மதுரை மற்றும் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதுவரை 35 முகாம்கள் நடைபெற்றுள்ளது. மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆரம்பித்த இந்த வேலை வாய்ப்பு முகாமை தற்போது, பிற மாநிலங்களிலும் நடத்துகின்றனர்.

எண்ணூரில் இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதில் கடலில் எண்ணெய் கொட்டிய வழக்கை விரைந்து முடித்து, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.200 கோடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரவாத மற்றும் மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும்.

காவிரி தீர்ப்பு வெளியானது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்திய போராட்டத்துக்கும், அ.தி.மு.க. ஆட்சிக்கும் கிடைத்த வெற்றியாகும். விரைவில் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். இனி, கர்நாடகா எந்த அணையும் கட்ட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவரிடம், “பிரதமர் மோடி கூறியதாலேயே எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தேன் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளாரே?” என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் ஜெயக் குமார், “அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. அணிகள் இணைந்ததற்கு பா.ஜனதாதான் காரணமா? என்று கேள்வி எழுப்புவது எங்களுக்கே சலிப்பாக உள்ளது. நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வோம். அதையேதான் துணை முதல்-அமைச்சரும் செய்து உள்ளார்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 15 =

*