சாதாரண காய்ச்சல் வந்தே இறந்தார்! முன்னாள் போராளி சந்திரச்செல்வனின் மனைவி…!!

சாதாரண காய்ச்சல் வந்த நிலையிலேயே முன்னாள் போராளி சந்திரச்செல்வன் இறந்ததாக அவரது மனைவி திரேஸ்ராணி சந்திரச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக முன்னாள் போராளிகள் திடீர் மரணங்களை தழுவும் நிலையில், சந்திரச்செல்வனும் திடீர் மரணத்தை தழுவியதாக அவரது மனைவி திரேஸ்ராணி குறிப்பிடுகின்றார்.
இம் மாதம் எட்டாம் திகதி வன்னியின் விசுவமடுவின் குமாரசாமிபுரம், புன்னை நீராவியில் வசித்து வந்த முன்னாள் போராளி சந்திரச்செல்வன் மரணமடைந்தார். வீரப்பன் என்று அழைக்கப்படும் இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவர், போராட்டத்தின்போது தனது இரண்டு கால்களை இழந்ததுடன் தனது இரண்டு கைகளிலும் கடும் காயத்திற்கு உள்ளாகியிருந்தார். நாட்டுக்காக போராட்டத்தில் இணைந்த சந்திரச்செல்வன் தனது உடல் அங்கங்களை இழந்து மிகுந்த வறிய நிலையில் வாழ்ந்து வந்தார்.
சந்திரச்செல்வன் அங்கவீனமுற்றபோதும் அவருக்கு எந்த விதமான தொற்று நோய்களோ, தொற்றா நோய்களோ காணப்படவில்லை என்று அவரது மனைவி திரேஸ்ராணி சந்திரச்செல்வன் கூறுகிறார். திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அவரை வைத்தியசாலையில் தான் அனுமதித்தாகவும் அவர் கூறினார்.
சாதாரண காய்ச்சல் மாறிவிடும், விரைவில் வீடு திரும்பி விடுவார் என்று தான் நம்பியதாகவும் மரணிக்கும் தறுவாய் வரை நன்றாக சந்திரச்செல்வன் பேசிக்கொண்டிருந்ததாகவும் கூறிய திரேஸ்ராணி அவரது திடீர் மரணத்தை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தன்னையும் பிள்ளைகளையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கணவன் இழந்து வெகு சில நாட்கள் ஆகின்றபோதும் தன்னுடைய மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் சந்திரச்செல்வன் முன்னெடுத்த வந்த தோட்ட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு, தன் குழந்தைகளுக்கான வாழ்வை நம்பிக்கையுடன் திரேஸ்ராணி சந்திரச்செல்வன் தொடர்வதாக குறிப்பிடுகிறார்.