;
Athirady Tamil News

என் வழி தனி வழி…!!

0

நடிகர் கமல்ஹாசன் தன்னை சந்தித்த பிறகு ‘எனது பாணி அரசியல் வேறு, கமல் பாணி அரசியல் வேறு’ என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வரும் 21 ஆம் தேதி முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை துவங்கவுள்ளார். அதற்கான சுற்றுப்பயண விவரத்தையும் நேற்று (பிப்ரவரி 17) வெளியிட்டுள்ளார். ‘நாளை நமதே’ என்ற பெயரிலான அரசியல் பயணத்தில் வரும் 21 ஆம் தேதி அன்றே மதுரையில் தனது கட்சி பெயர், கொடி,சின்னம் போன்றவற்றை அறிமுகம் செய்து வைத்து கமல்ஹாசன் உரையாற்றவுள்ளார்.

கடந்த பிறந்தநாளன்று தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்த கமல்ஹாசன், மையம் என்ற பெயரில் செயலி மற்றும் நாளை நமதே என்ற பெயரில் இணையதளம் போன்ற ஆயத்த பணிகளை செய்து வந்தார். அவருக்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில், தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்து தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்.இதற்கு நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கு வாழ்த்துகள், வருக வருக என்று வரவேற்றிருந்தார். அரசியலில் கமல்ஹாசனுடன் கூட்டணியா என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, காலம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார்.

நேற்று முன் தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை சந்தித்த கமல்ஹாசன், நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்புக்கு பிறகு, இடதுசாரி தலைவர்களை மட்டுமல்ல அனைத்து தலைவர்களையும் சந்திப்பேன் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 18) நடிகர் ரஜினிகாந்தை போயஸ்தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். அந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “எனது வாழ்க்கையில் இது முக்கியமான பயணம், பயணத்திற்கு புறப்படும்முன் எனக்கு பிடித்தமானவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று வந்தேன், வரும் 21 ஆம் தேதி தொடங்க உள்ள எனது அரசியல் பயணத்தில் பங்கேற்குமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்தேன். எனது அரசியல் பயணத்தில் பங்கேற்பது அவரின் தனிப்பட்ட விருப்பம்.இது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல,நட்பு ரீதியானது தான். திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுவது தவறானது” என்று கூறினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “கமல்ஹாசன் அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்தை தெரிவிக்கிறேன். கமல்ஹாசன் பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ அரசியலுக்கு வரவில்லை, எல்லோருக்கும் தெரியும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். தமிழக மக்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நோக்கமாகும். ஆண்டவனின் ஆசிர்வாதம் கமலுக்கு கிடைக்க வேண்டுகிறேன். சினிமாவிலேயே என்னுடைய பாணி வேறு , நடிகர் கமல்ஹாசனின் பாணி வேறு அதே போல் அரசியலிலும் என்னுடைய பாணி வேறாகவும் கமல்ஹாசனின் பாணி வேறாகவும் இருக்கும்.ஆனால்,மக்களுக்கு நல்லது செய்வதுதான் குறிக்கோள். கமல் எல்லா பயணத்திலும் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தங்களது அரசியல் வருகை குறித்த அறிவிப்புக்கு பின்னர்,இது முதல்முறையாக நடைபெற்ற சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*