;
Athirady Tamil News

மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. மக்கள் சுயமாகவே உள்ளனர் – சந்திரகுமார்..!! (படங்கள்)

0

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே எமது இலட்சியமாகும். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் என்ற வகையில் வினைத்திறன் மிக்க நிர்வாகம், அர்ப்பணிப்பான சேவை ஆகியவற்றின் மூலமே தங்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் எம்மைக் கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் ஆட்சியமைக்க வேண்டும் என மக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பாக நாம் பரிசீலனை செய்வோம் என்று அவர்களிடம் கூறியிருந்தோம். இதைக் குறித்து நாம் பல்வேறு தரப்பினர்களிடமும் பேசியும் வருகிறோம்.

ஆனால் நிச்சயமாக நாம் யாருடனும் கூட்டுச் சேர மாட்டோம் என்பதையும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தோம் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டக் கூட்டுறவு மண்டபத்தில் கரைச்சிப் பிரதேச சபையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் அங்கே தெரிவிக்கையில், “மக்கள் நேர்மையானவர்களையே தங்களின் பிரதிநிதிகளாக, தங்களுக்கான சேவையாளர்களாக எதிர்பார்க்கிறார்கள். உண்மையைச் சொல்லி, மக்கள் நலனை மனதில் கொண்டு செயற்படுவோரையே அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்த நம்பிக்கையில்தான் அவர்கள் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலில் மாற்றம் ஒன்று தேவை என்பதை வெளிப்படுத்தி வாக்களித்திருக்கிறார்கள்.

இதனால்தான் பலம் மிக்க கட்சிகளைப் புறந்தள்ளி விட்டு, அந்தக் கட்சிகள் செய்த பொய்யான பரப்புரைகளையும் அவதூறுகளையும் மறுத்து ஒதுக்கி விட்டு, எம்மைத் தெரிவு செய்திருக்கிறார்கள்.

மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. ஆனால், சிலர் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றலாம் என்றே எண்ணிக் கொண்டு பொய்களைத் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

ஒரு காலம் இப்படியானவர்களை நம்பி மக்கள் அவர்களின் பக்கமாக நின்றதும் அவர்களுக்கு ஆதரவளித்ததும் உண்டு. ஆனால், அந்த நிலைமை இன்று மாறி விட்டது.

மக்கள் இப்பொழுது தெளிவாகச் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின் முடிவுகளாகும்.

எதிர்காலத்தில் இந்தப் பொய்யான சக்திகளை மக்கள் ஒதுக்குவார்கள். இதுதான் வரலாறாகும்.

கடந்த காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதைப்பற்றிப் பேசாமல், மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களின் மீது அவதூறுகளை வாரியிறைத்துச் சேறு பூச முற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தரப்புக்குக் கிளிநொச்சியில் மக்கள் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறார்கள்.

இதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதற்காக மக்களை அவர் குறை சொல்ல முற்பட்டிருக்கிறார்.

ஆனால், தேர்தல் காலத்தில் தேர்தல் விதிமுறைகளுக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் அப்பால் சென்று மிகக் கீழான முறையில் பரப்புரைகளிலும் வாக்காளர்களைத் திசைதிருப்பும் நடவடிக்கையிலும் பாராளுமன்ற உறுப்பினல் சிறிதரன் தரப்பினர் ஈடுபட்டனர் என்பதை கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவரும் நன்றாக அறிவார்கள்.

அரசாங்கத்துடன் அவருக்கிருக்கும் இரகசிய உறவை எப்படியெல்லாம் மறைக்க முற்படுகிறாரோ அதைப்போல தாம் கடந்த காலத்தில் வழங்கிய நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையெல்லாம் மறைப்பதற்காக தாயகம், தேசியம், விடுதலை, போராட்டம், மாவீரர்களின் தியாகம் என்று பசப்பு வார்த்தைகளைப் பேசி மக்களைத் திசை திருப்ப முயற்சித்தார்.

அரசியல் நாகரீகத்தைப் பேணி, தாம் வழங்கிய வாக்குறுதிகளில் எவற்றையெல்லாம் நிறைவேற்றினோம், எதிர்காலத்தில் எவற்றையெல்லாம் செய்வோம் என்று ஒரு மேடையில்கூட அவர் பேசியதில்லை.

ஆனால், நாம் வெளிப்படையாகவே எமது கடந்த காலத்தின் செயற்பாடுகளையும் எதிர்காலச் செயற் திட்டங்களையும் தேர்தல் விஞ்ஞாபனமாக எழுத்தில் முன்வைத்திருந்தோம். அதற்காக எமக்கு மக்கள் பேராதரவை வழங்கியிருக்கிறார்கள்.

அத்தோடு கிளிநொச்சியில் கடந்த நான்கு வருடங்களாக இவர்களின் அதிகாரத்திலேயே பிரதேச சபைகள் இருந்தன ஆனால் இவர்கள் பிரதேச சபையை வினைத்திறன் மிக்க சபையாக நடத்தவி்லலை, அக்காலத்தில் இவர்கள் ஒரு சுடலையை கூட சீரமைக்கவில்லை அந்தளவுக்கு வினைத்திறனற்று நிர்வாகத்தை நடத்தினார்கள்.

இந்த நிலையில்தான் தங்களின் கடந்தகாலத்தை மறைக்க தற்போது வாய் வீரம் பேசி அறிக்கைகளை விடுத்து வருகின்றனர். எனத் தெரிவித்த அவர்

அந்த வகையில் நான் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடிப்படையில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளில் நல்லதோர் ஆட்சியை, வினைத்திறன் மிக்க நிர்வாகமொன்றைப் பொறுப்பேற்குமாறு கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு தரப்பினரும் எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இதைக் குறித்து நாம் உரிய தரப்பினர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.

நாம் தமிழ் மக்களின் அரசியல் உரிமையையும் அவர்களுடைய அபிருத்தியையும் சமாந்தரமாகவே முன்னெடுக்க விரும்புகிறோம்.

இவை இரண்டையும் சமாந்தரமான முறையில் முன்னெடுக்க வேண்டும் என்றே மக்களும் விரும்புகிறார்கள். இதுவே தமிழினத்தில் எதிர்கால அரசியல் வழிமுறையாகும்.

இதை ஏற்றுக்கொள்ளாத எந்தச் சக்திகளும் வரலாற்றில் வெற்றியடைய முடியாது. அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை என்றார்.

இந்த நிகழ்வில் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் சுப்பையா மனோகரன், முன்னாள் போராளி வேங்கை உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 4 =

*