;
Athirady Tamil News

பட்டதாரி வாலிபரை கொடூரமாக தாக்கிய, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன் போலீசிடம் சரண்…!!

0

பெங்களூரு டாலர்ஸ் காலனியில் வசித்து வருபவர் லோகநாத், தொழில்அதிபர். இவரது மகன் வித்வத். இவர், எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். நேற்று முன்தினம் இரவு கப்பன்பார்க் அருகே உள்ள வணிக வளாகத்தில் இருக்கும் ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக வித்வத் தனது நண்பர்களுடன் சென்றார்.

அப்போது அதே ஓட்டலில் பெங்களூரு சாந்திநகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஹாரீசின் மகன் முகமது ஹாரீஸ் நலபட் தனது நண்பர்களுடன் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக முகமது ஹாரீஸ் நலபட் மீது வித்வத்தின் கால் பட்டுவிட்டது. இதுபற்றி வித்வத்திடம் முகமது ஹாரீஸ் நலபட் மற்றும் அவரது நண்பர்கள் கேட்டு தகராறு செய்தார்கள்.

உடனே தான் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் காலில் பலமாக அடிபட்டு இருப்பதாகவும், இதனால் தனது கால்களை அசைத்த போது தெரியாமல் பட்டு விட்டதாகவும் வித்வத் கூறினார். இதனை ஏற்க முகமது ஹாரீஸ் நலபட் மற்றும் அவரது நண்பர்கள் மறுத்து விட்டார்கள்.

இதுதொடர்பாக அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே திடீரென்று ஆத்திரமடைந்த முகமது ஹாரீஸ் நலபட்டும், அவரது நண்பர்களும் சேர்ந்து வித்வத்தை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஓட்டலில் இருந்து வெளியே இழுத்து வந்தும் அவரை கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது.

இதில், வித்வத்துக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அவரது முகம் முழுவதும் வீங்கியதுடன், அவரால் பேச முடியாமல் போனது. பின்னர் வித்வத்தை, அவரது நண்பர்கள் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு முகமது ஹாரீஸ் நலபட்டும், அவரது நண்பர்களும் வந்து வித்வத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த வித்வத்தின் சகோதரரிடமும் சண்டை போட்டதுடன், அவரையும் தாக்க முயன்றதாக தெரிகிறது. பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் வித்வத் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் முகமது ஹாரீஸ் நலபட் மற்றும் அவரது நண்பர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் போலீசார் தங்களை தேட ஆரம்பித்தது பற்றி அறிந்ததும் முகமது ஹாரீஸ் நலபட்டும், அவரது நண்பர்களும் தலைமறைவாகி விட்டார்கள்.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள முகமது ஹாரீஸ் நலபட் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் சுனில்குமாருக்கு முதல்-மந்திரி சித்தராமையா அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

அதைத்தொடர்ந்து, முகமது ஹாரீஸ் நலபட் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்ய கப்பன்பார்க் உதவி போலீஸ் கமிஷனர் மஞ்சுநாத் தல்வார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், போலீஸிடம் இன்று முகமது ஹாரீஸ் நலபட் சரண் அடைந்தார்.

தனது மகன் சரண் அடைந்த பிறகு கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹரிஸ், “ சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் கிடையாது என்பதால், சரண் அடைய சொன்னேன். இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − two =

*