;
Athirady Tamil News

தீடை கடற்பகுதியில் கடற்படையினரின் இடையூரைக் கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

தீடை கடற்பகுதியில் மீன் பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் இடையூறு விளைவித்ததை கண்டித்து தலைமன்னார் கிராம மீனவர்கள், ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இன்று (திங்கட்கிழமை) தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஒன்றுக் கூடிய நூற்றுக்கணக்கான மீனவர்கள், தாம் பல வருடங்களாக தீடை பகுதியில் மேற்கொண்டு வரும் மீன் பிடி நடவடிக்கையை தொடர்ந்தும் மேற்கொள்ள அனுமதியை பெற்று தருமாறு கோரி பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தலைமன்னார் கடற்படை முகாமிற்குச் சென்று தமது பிரச்சினைகள் தொடர்பில் கடற்படை அதிகாரிகளுக்கு தெரிவித்ததோடு, தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்தனர்.

எனினும் தமது பிரச்சினைகளுக்கு தலைமன்னார் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கூறி பாதிக்கப்பட்ட மீனவர்கள் பொலிஸ் நிலைய பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமன்னார் பொலிஸ், மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எழுத்து மூலம் தமது பிரச்சினை தொடர்பில் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மக்களுடன் கலந்துரையாடியதோடு, உரிய அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

மக்களுடன் கலந்துரையாடிய கடற்தொழில் திணைக்கள பணிப்பாளர் மற்றும் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் தலைமன்னார் கடற்படை முகாமிற்குச் சென்று கடற்படை அதிகாரிகளுடன் குறித்த பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தையினை ஆரம்பித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக மன்னாரில் இருந்து “இராவணேஸ்வரன்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − nine =

*