;
Athirady Tamil News

தமிழ் அரசியல்வாதிகளிற்கு சிவப்பு எச்சரிக்கை…!!

0

தமிழ் அரசியல்வாதிகளிற்கு சிவப்பு எச்சரிக்கை – வடமாகாண சுகாதார அமைச்சர்.தமிழ் அரசியல்வாதிகளிற்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்தார்.

19.02.2018 வடமாகாண உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் வேண்டுகொளிற்கினங்க வவுனியா மாவட்டத்தில் உள்ள வைத்திசாலைகளின் குறை நிறைகளை அறிவதற்கான விஜயத்தினை மேற்கொண்டு வைத்தியசாலை செயற்பாடுகள் தரம் மற்றும் குறைகளை கேட்டறிந்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் வைத்திய உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக மாவட்ட வேறுபாடு இல்லாமல் சகல மாவட்டங்களிலும் ஆளணி பற்றாக்குறை பெரும்பிரச்சனையாகவே உள்ளது. இப்பிரச்சனைகள் மத்திய அரசினால் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனை என்பதால் தொடர்ந்தும் எங்களால் அந்த முயற்சிகள் தொடர்ந்தும் எடுக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் சிறு சிறு பிரச்சனைகளை பிராந்திய சுகாந்திர சேவை பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறேன்.

வவுனியாவில் தனியார் சிகிச்சை என்ற பேரில் தகுதியற்ற மருத்துவர்கள் சிகிச்சைகள் வழங்குவதுடன் வேறு துறைகளில் சித்திபெற்றவர்கள் அதற்கு தொடர்பில்லாத வைத்திய முறைகளை மேற்கொள்வதாகவும் பொதுமக்களினால் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர்ந்து வவுனியா வைத்தியர்களினால் குறி;பிட்ட பெயர் விபரங்கள் உள்ளடங்களாக தங்களது கல்வித்தகைமை அல்லது வைத்திய நிபுணத்துவத்தின் தகுதி அற்றவர்களும் வைத்திய துறையில் ஈடுபடுவதாக கூறி எனக்கு ஒரு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

மேலும் இதுதொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகளிற்கு அறிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

வடமாகாணத்தை பொறுத்த வரை நிறைய சுகாதார குறைபாடுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக இவ்வாறான நிறைய விடயங்களிற்கு மத்திய சுகாதார அமைச்சின் கைகளில் தங்க வேண்டிய நிலை கூட இருக்கின்றது. வடமாகாண சுகாதார அமைச்சு என்ற ரீதியில் இதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.

பல்வெறு விதமான நியமனங்கள், வளங்களை பெறுவதற்கு எமது மாகாணசபைக்கு அதிகாரங்கள் இல்லை. ஆகவே எமது மாகாணசபைக்குரிய உச்ச அதிகாரங்களை பெற்றுக்கொண்ட பின்னர்தான் இவ்வாறான பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

நிரந்தரமான சமஸ்டி முறையிலோ அல்லது அதனை விட கூடிய முறையில் எங்களுக்குரிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற போது வடமாகாண மக்களுடைய சுகாதாரம், கல்வி, மீன்பிடி, விவசாயம் போன்ற சகல துறைகளிலேயும் முன்னேற்றகரமான சேவையை மக்களுக்கு செய்யக்கூடியதாக இருக்கும்.

அதற்கு முன்னர் தேர்தல் காலத்தில் அரசாங்கத்தினால் அரசியல் இலாபமீட்டுவதற்காக வாக்குறுதிகளை வழங்கி எமது மக்களின் ஒற்றுமையை அல்லது வாக்குகளை சிதறடித்து எங்களது பலத்தை குறைப்பதை பார்க்க கூடியதாக இருக்கிறது. குறிப்பாக இம்முறை நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவானது பலருக்கு ஒரு செய்தியை கூறுகின்றது.

இது மக்களின் மன வெளிப்பாடாகும். இனிவரும் காலங்களில் எங்களிடம் இருக்கின்ற சில தவறுகளை திருத்திக்கொண்டு மக்களிடத்திலே சரியான முறையிலே அனுக வேண்டும் சரியான முறையில் செய்ய வேண்டும் என்று இம்முறை நடந்த தேர்தலின் மூலம் எம்ம்மக்களினால் எமக்கு சிவப்பு கொடி காட்டப்பட்டுள்ளதுடன் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

எத்தனை சபைகளை கைப்பற்றியுள்ளோம், எத்தனை சபைகளிற்கு தவிசாளர்களை நியமித்தோம், எத்தனை சபைகளை எங்களது கட்சிக்குள் எடுத்துக்கொண்டோம் எனபதை விட எந்தளவிற்கு மக்களிடத்தே நாம் சென்றிருக்கிறோம், எந்தளவிற்கு மக்களிற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருக்கிறோம் எம்மக்களிற்கான நிரந்தர தீர்வினை பெறுவதற்கு எந்தளவிற்கு அரசாங்கத்துடன் வெகு கவனமாக இருந்திருக்கிறோம் என்பது எல்லாம் சிந்திக்க வேண்டிய காலமாகும். எதிர் காலத்தில் என்றாலும் இதனை புரிந்து கொண்டு எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகளும் கவனமாக தங்களது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − three =

*