;
Athirady Tamil News

யாழ். நீதிமன்றில் தப்பித்தவர் 6 மாதங்களின் பின் சிக்கினார்…!!

0

யாழ்ப்பாணம் நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் சுமார் 6 மாதங்களின் பின்னர் வவுனியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். சந்தேகநபர் சிறைச்சாலை காவலிலிருந்து தப்பித்த குற்றத்துக்கான தண்டைத் தீர்ப்பு நாளைமறுதினம் புதன்கிழமை வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட நீதிவான், அன்றுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவு, ஊர்காவற்றுறை உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த அன்ரன் ஜெபராசா தயானந்தன், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த வருடம் ஓகஸ்ட் 10ஆம் திகதி முற்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டதும் அவர், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து நழுவி நீதிமன்றிலிருந்து தப்பிச் சென்றார்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் துரத்திச் சென்றபோதும் சந்தேகநபர் தப்பி ஓடிவிட்டார்.

சந்தேகநபரைத் தேடி பொலிஸார் வலை வீசியிருந்ததுடன், அவரைப் பிடிக்க பொது மக்களிடமும் உதவி கோரியிருந்தனர்.

மேலும் சந்தேகநபரின் மனைவி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அவரும் மன்றில் முற்படதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் வவுனியா பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். எனினும் அவரது மனைவி தலைமறைவிலேயே உள்ளார்.

“நீதிமன்றிலிருந்து சந்தேகநபர் தப்பித்தவேளை, அவரது மனைவி நீதிமன்ற வாயலில் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்துள்ளார். சந்தேகநபர் சிறைக்காவலர்களிடமிருந்து நழுவி மனைவியின் மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பித்துள்ளார்” என்று பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

இதேவேளை, வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து கடந்த 6ஆம் சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார் அவரிடமிருந்து இரண்டு கிராம் ஹெரோயினைக் கைப்பற்றியிருந்தனர். இதையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டபோது பல சம்பவங்கள் வெளியாகியிருந்தன” என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

“கடந்த 6 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு வானில் கொழும்பு சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இரண்டு கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.

அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்வதற்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

விசாரணைகள் மேற்கொண்டுவந்த நிலையில் குறித்த சந்தேக நபர் திருட்டுச் சம்பவத்துடனும் பெண்கள் தனிமையிலிருக்கும் வீடுகளில் திருடி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் 7நாள்கள் தடுத்து வைக்கும் அனுமதியை நீதிமன்றத்திடம் பெற்று மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது யாழ்ப்பாணம், செட்டிகுளம், மன்னார் போன்ற பகுதிகளிலும் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவருக்கு எதிராக ஏழு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

சந்தேகநபரால் திருடப்பட்டு வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட 42 பவுண் நகைகளும் மீட்டுள்ளன” என்று வவுனியா மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு அதிகாரி பொறளை மேதார மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*