;
Athirady Tamil News

கனடா பிரதமரை தமிழக அரசு கௌரவிக்க வேண்டும்: சீமான் அறிக்கை…!!

0

இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எட்டு நாட்கள் சுற்றுப்பயணமாக குடும்பத்துடன் இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அவர்களுக்கு உரிய மரியாதை அளித்திராது அவரைப் புறக்கணித்து அவமதிக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியதாகும்.

மத்தியில் ஆளும் மோடி அரசின் தேவையற்ற இவ்வணுகு முறையினால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பைக் குலைக்கும் வகையிலான கருத்துருவாக்கங்கள் உருவாகி கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

பிறிதொரு நாட்டின் தலைவர் இந்நாட்டிற்கு வருகைபுரியும்போது அவரை இந்நாட்டின் தலைவர் நேரில் சென்று வரவேற்று உபசரிப்பது என்பது ஓர் பொதுப்பண்பாடு; காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஓர் நாகரீக மாண்பாகும்.

மேலும், பிறிதொரு நாட்டோடு நல்லுறவைப் பேணவும், அந்நாட்டை எவ்வகையில் மதித்துப் போற்றுகிறோம் என்பதனைக் காட்டவும் இந்நாட்டிற்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பாகவுமே சர்வதேச அரசியல் அரங்கங்கள் அதனைக் கணக்கிட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள கனடா பிரதமரை நேரில் சென்று வரவேற்காது புறக்கணித்ததோடு மட்டுமல்லாது அவ்வரவேற்பு நிகழ்வுக்கு ஒரு கேபினட் அமைச்சரைக்கூட அனுப்பாது வேளாண்துறை இணை அமைச்சரான கஜேந்திர சிங்கை அனுப்பியது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.

அமெரிக்க அதிபராக பதவி வகித்த பராக் ஒபாமா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அபு தாபி முடி இளவரசர் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் ஆகியோரின் இந்திய வருகையின்போது தானே நேரில் சென்று கட்டித்தழுவி வரவேற்று உபசரித்த பிரதமர் மோடி அவர்கள் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ வருகையின்போது மட்டும் ஏன் இத்தகையப் போக்கைக் கடைபிடிக்கிறார் என்பது விந்தையாக இருக்கிறது.

மேலும், அவரை வரவேற்று ஒரு வாழ்த்துச்செய்திகூட இதுவரை ட்விட்டர் தளத்தில் வெளியிடப்படவில்லை. உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள தாஜ் மகாலுக்கு கனடா பிரதமர் சென்றபோதும் அந்த மாநிலத்தின் முதல்வர் ஆதித்யநாத் யோகி அவரைச் சந்திக்கவில்லை என்பதிலிருந்து இவையாவும் திட்டமிட்டப் புறக்கணிப்பு வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.

இதனால், கனடா நாட்டு ஊடகங்கள் இந்திய நாட்டிற்குத் தனது கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் வைத்து வருகின்றன.

இந்தியாவில் வாழுகிற பெருத்தத் தேசிய இன மக்களான தமிழர்களுக்கும், சீக்கியர்களுக்கும் ஆதரவளித்து பெருமளவு முக்கியத்துவம் அளித்து வரும் கனடா நாட்டின் செயல்பாடுகளே இந்திய அரசின் இத்தகையப் புறக்கணிப்புக்குக் காரணம் என்பது வெளிப்படையானது.

தமிழர்களின் தேசியத் திருநாளாக இருக்கிற பொங்கல் பெருவிழாவிற்கு அரசு விடுமுறை அளித்ததோடு அம்மாதத்தினைத் தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவித்துத் தமிழர்களுக்குப் பெருமிதம் சேர்த்தது கனடா நாடு என்பது அந்நாடு தமிழர்களுக்கு வழங்கிருக்கும் முதன்மைத்துவதைப் பறைசாற்றும்.

மேலும், ஆண்டுதோறும் பொங்கல் பெருவிழா அன்று தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து தனது குடும்பத்தோடு பொங்கல் கொண்டாடி வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தமிழிலே தெரிவித்து தமிழர்களை உள்ளம் பூரிப்படையச் செய்து பெருமைப்படுத்தி வருகிறார்.

இதுமட்டுமல்லாது கனடா நாட்டின் 150வது விடுதலைத்திருநாளை முன்னிட்டு அந்நாட்டு தேசிய கீதத்தை தமிழிலும் வெளியிட்டு இந்திய நாடுகூட அளித்திட முன்வராத பெரும் அங்கீகாரத்தைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறது கனடா நாடு.

தமிழர்களுக்கு அடைக்கலம் தந்து ஆதரவளித்ததோடு மட்டுமல்லாது உயரிய அங்கீகாரத்தைத் தந்து தமிழர் அடையாளங்களையும், விழாக்களையும் போற்றும் வகையில் நடத்தும் கனடா நாட்டினுடைய பிரதமரைப் பெருமைப்படுத்தி கௌரவிக்க வேண்டியது பத்து கோடித் தமிழ்த்தேசிய இன மக்களுக்கும் தாயகமாக விளங்கும் தமிழக அரசினுடைய தலையாயக் கடமையாகும்.

ஆகவே, இந்தியா வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைத் தமிழகத்திற்கு விருந்தினராக அழைத்து பெருமைப்படுத்த வேண்டும் என்பது தமிழ்த்தேசிய இன மக்களின் அவா.

இது தமிழர்களுக்கு கனடா நாடு அளித்து வரும் முன்னுரிமைக்காகவும், முக்கியத்துவத்துக்காகவும் நன்றிப்பெருக்கோடு தமிழர்கள் திரும்பச் செய்கிற விரும்தோம்பலாக இருக்கட்டும் என அறிவுறுத்துகிறேன்..

ஆகவே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து அவரை விருந்தினராகத் தமிழகத்திற்கு அழைத்து விருந்தோம்பல் செய்து பெருமைப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 20 =

*