;
Athirady Tamil News

ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு வலைவிரிக்கும் கமல்..!!

0

தன்னுடைய கட்சியில் இணைந்து செயல்படுவதற்காக சமூக சிந்தனையுள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ரகசிய அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வந்த நடிகர் கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் தான் அரசியலுக்கு வரப்போவதாக அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாய் மையம் செயலியையும் அறிமுகப்படுத்தினார். நாளை (பிப்ரவரி 21) தன்னுடைய அரசியல் பயணத்தை ராமநாதபுரத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ள நடிகர் கமல்ஹாசன், நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில் கட்சிப் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக தனக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றுவருகிறார். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனைச் சந்தித்த கமல்ஹாசன், அடுத்தடுத்த நாட்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் சந்தித்தார்.

டி.என்.சேஷனைச் சந்தித்தபோது, தன்னுடைய கட்சியில் இணைய வேண்டும் என்று கமல்ஹாசன் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்பட்டது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட அதிகாரிகளை ரகசியமாக சந்தித்து, கட்சிக்கு வருமாறு கமல் வேண்டுகோள் விடுத்துவருவதாகத் தெரிகிறது.

சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கும் நிலையில், கமல்ஹாசன் கட்சியில் அடுத்த கட்டத் தலைவர்கள் என்று யாரும் இல்லை. இந்நிலையில், கூட்டுத் தலைமை இருந்தால்தான் ஆரோக்கியமான கட்சியாகவும், ஜனநாயக கட்சியாகவும் இருக்க முடியும் என்றும் அவர் நினைப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தில் ஊழலற்ற தரமான ஆட்சியை அமைக்க முயற்சிக்கும் விதமாக கமல்ஹாசன், ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக முன்னாள் ஐஜி மௌரியாவைச் சந்தித்த கமல்ஹாசன், “நான் துவங்கப்போகும் கட்சியில் எனக்கு அடுத்ததாக இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லை. நீங்கள் இருந்தால் கட்சியை நிர்வாகம் செய்யச் சிறப்பாக இருக்கும். நீங்கள் ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுங்கள்” என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணியிலிருருந்து ஓய்வுபெற்ற சமூக சிந்தனையுள்ள அதிகாரிகளையும் நம்மோடு இணைக்க முயற்சி செய்யுங்கள் என்றும் தொடர்ந்து மௌரியாவிடம் பேசிவருகிறார் கமல்ஹாசன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − six =

*