;
Athirady Tamil News

மக்கள் நலனே எனது கொள்கை..!! (வீடியோ)

0

மதுரையில் மய்யம் கொண்ட கமல்
அப்துல் கலாம் வீட்டிலிருந்து தொடங்கிய அரசியல் பயணத்தின் முதல் பொதுக்கூட்ட அரங்கேற்றத்தை நேற்று (பிப்ரவரி 21) மதுரையில் வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்று கட்சியின் பெயரையும் வெள்ளை நிறப் பின்னணியில் பிணைந்த கரங்கள் கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

கமல்ஹாசனின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று மாலை 5 மணியளவில் மதுரை வந்தார். மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய கேஜ்ரிவாலோடு சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார் கமல்ஹாசன். அதன் பிறகு இருவரும் ஒரே காரில் ஒத்தக்கடை மைதானத்துக்கு வந்து சேர்ந்தனர். சரியாக 7.25 மணிக்கு ஒத்தகடை மைதானத்தில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை வண்ணங்களுடன் கூடிய இணைந்த கைகள் கொடியை 40 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் ஏற்றி அறிமுகம் செய்தார் கமல்ஹாசன்.

ஒரு சோறு…

கட்சிக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு மேடைக்கு வந்த கமல்ஹாசன், “இது உங்களுக்கான கட்சி; மக்களுக்கான கட்சி. நான் அறிவுரை சொல்லும் தலைவன் அல்ல; அறிவுரை கேட்கும் தொண்டன். நான் உங்கள் கருவி; தலைவனல்ல” என்றபடியே, ‘மக்கள் நீதி மய்யம்’ என்று தனது கட்சியின் பெயரை அறிமுகம் செய்துவைத்தார்.

“நான் சமைக்கவிருக்கும் மக்களாட்சியின் ஒரு சோற்றுப் பதமே இந்தக் கூட்டம்” என்ற மக்களைப் பார்த்து கைநீட்டிய கமல்ஹாசன், “இந்தச் சோற்றுப் பருக்கைகளைத் தொட்டுப் பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப் பாருங்கள்” என்றார்.

பழையதை நினைக்கும் பாங்கு!

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பார்தி மற்றும் விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் மேடைக்கு அழைக்கப்பட்டனர். தனது திரைப் பயணத்தின்போது தனக்குத் துணையாக இருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளான ஆர்.தங்கவேலு, சுதாகர் உள்ளிட்டோரை அழைத்து கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார். அதன் பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டார்கள்.

அகில இந்தியப் பொறுப்பாளராக ஆர்.தங்கவேலு அறிவிக்கப்பட்ட பின்னர், அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். திருச்சி கமல்ஹாசன் நற்பணி மன்றத்திலிருந்து ரசிகர்களால் எடுத்து வரப்பட்ட தீப்பந்தம் அவரிடத்தில் வழங்கப்பட்டது. மாவட்டப் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்ததைப் போலவே கட்சியின் உயர் மட்டக் குழு அறிமுகம் செய்யப்பட்டது. அந்தக் குழுவில் மகேந்திரன், அருணாச்சலம், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், சுபா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீப்ரியா, கமீலா நாசர், சபரிராஜன், வழக்கறிஞனர் ராஜசேகரன், குமாரவேல், மூர்த்தி, ராஜநாராயணன், ஆர்.ஆர்.சிவராம், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மௌரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கவிஞர் சிநேகன், நடிகர் வையாபுரி, ரகுராம் போன்றோர் மேடையிலேயே கட்சியில் இணைந்தனர்.

திமுக, அதிமுகவிடம் சிக்கிய தமிழகம்!

முதலில் வாழ்த்துரை வழங்க வந்த விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், “மக்களை மையமாக வைத்து கமல்ஹாசன் இந்தக் கட்சியைத் தொடங்கிவைத்துள்ளார். அரசியல் வெற்றிடத்துக்கான இடமல்ல; போர்க்களத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது அதை நிரப்புவதற்காக கமல்ஹாசன் கட்சியைத் தொடங்கியுள்ளார்” என்று குறிப்பிட்டார்.

அவரையடுத்து பேசிய சோம்நாத் பார்தி, “தமிழ்நாடு மாற்றத்துக்காகக் காத்திருக்கிறது. அந்த மாற்றத்தை கமல்ஹாசன் கொண்டுவருவார். பெரியார், வள்ளுவர் வழியில் மக்களுக்கு நல்லாட்சியை வழங்க வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசுகையில், ‘‘திமுக, அதிமுக என்கிற இரு கட்சிகளுக்கு இடையே தமிழகம் சிக்கித் தவிக்கிறது. ஊழல் வேண்டும் என்றால் திமுக, அதிமுகவை ஆதரியுங்கள். நேர்மையான அரசு இருந்தால் அனைத்தும் சாத்தியம். சிறந்த நடிகரான கமலை, உண்மையான ஹீரோவாகப் பார்க்கிறேன். கமல் யதார்த்த வாழ்க்கையின் கதாநாயகன். இனி வாக்குச்சாவடிக்குச் சென்றால் கமலுக்கு வாக்களியுங்கள். பள்ளிகள், மருத்துவமனைகள் வேண்டும் என்றால் கமல்ஹாசனை ஆதரியுங்கள்” என்று தெரிவித்தார்.

மக்கள் நலனே கொள்கை!

இவர்களை தொடர்ந்து உரையாற்றிய கமல்ஹாசன், “நாங்கள் பல வருடங்களாக அமைதியாக மக்கள் பணி செய்துவந்தோம். அதற்கு இங்குள்ள கட்சிகள் இடையூறு செய்துவந்தன. கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். ஆனால், மறந்தவையாக இருக்காது. நான் இங்கே அமைதியாகக் கட்சியைத் தொடங்கிவிட்டு படிப்படியாகப் பிரசாரத்துக்குப் போகலாம் என்றிருந்தேன். ஆனால் முதல்வர் கேஜ்ரிவால் இப்போதே தொடங்கி வைத்துவிட்டார். எத்தனை நாள் இந்த அநீதியைக் கண்டு பொறுத்திருப்போம். இன்று பேச்சு, நாளை செயல்.

என்னிடம் நேற்று பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இசங்கள் எல்லாம் தேவையில்லை. மக்கள் நலனே நமது கோட்பாடாக, கொள்கையாக இருக்க வேண்டும் என்று என் மனதில் இருந்ததைப் பிரதிபலித்தார்” என்று கூறிய கமல்ஹாசன், “கட்சிக் கொள்கைகள் என்னவென்று கேட்கிறார்கள். எல்லா நல்ல முதலமைச்சர்களுக்கும் இருக்கும் கொள்கைதான் எனது கொள்கை” என்றார்.

தொடர்ந்து பேசும்போது, “அனைத்து தரப்பினருக்கும் தரமான கல்வி வழங்கப்படும். சாதி மதப் பிரச்சினைகள் தடுக்கப்படும். நான் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன். நல்ல கட்சிக்கு வாக்களித்திருந்தீர்கள் என்றால் ஆண்டுக்கு ரூ.6,000 இல்லை, ரூ.6 லட்சம் கிடைத்திருக்கும். ஓட்டின் மதிப்பு தெரியாமல் அடிமாட்டு விலைக்கு நீங்கள் விற்றுவிட்டீர்கள். தமிழகத்தில் எத்தனையோ படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை ஒழிக்கப்படும். காவிரி பிரச்சினையை தீர்க்க முடியுமா என்று என்னிடம் கேட்கிறார்கள்? ஒழுங்காக ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்திடம் உரையாடல் நடத்தினால் தீர்க்க முடியும். தண்ணீர் அல்ல. ரத்தத்தைத்தைக்கூட என்னால் பெற்றுத்தர முடியும். ரத்தம் என்றால் சண்டை அல்ல. ரத்த தானத்தைச் சொல்கிறேன். பினராயி விஜயன் நம்மை வாழ்த்தியுள்ளார். நமக்குச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது” என்ற கமல்ஹாசன் கட்சியின் கொடி பற்றி விளக்கினார்.

“ஆறு கைகள் தென்னிந்தியாவில் உள்ள ஆறு மாநிலங்களைக் குறிக்கும். நடுவில் இருக்கும் ஆறுமுனை நட்சத்திரம் மக்களை குறிக்கும்” என்றார்.

“எனக்கு வயது 63. நான் அடுத்த தலைமுறைக்காக விதை போட வந்துள்ளேன். இது என்னுடன் முடியும் கட்சி அல்ல, குறைந்தது 3, 4 தலைமுறையாவது தாக்குப்பிடிக்கும். தராசின் நடுமுள் நாம். எந்தப் பக்கமும் சாய மாட்டோம். அடுத்த தலைமுறைக்கான விதையைப் போடவே வந்துள்ளேன். மக்களையும் நீதியையும் மையமாக கொண்டது மக்கள் நீதி மய்யம். நமது கட்சி ஆட்சியைப் பிடித்தால் யாரும் நிரந்தர முதல்வர்களாக இருக்க மாட்டார்கள்” என்று உரையின் முதல் கட்டத்தை முடித்தார்.

மக்கள் கேள்விக்குப் பதில்!

பொதுக்கூட்டத்தில் மக்களிடம் வைக்கப்பட்ட கேள்விப் பெட்டிகளிலிருந்து சில கேள்விகள் கமல்ஹாசன் முன் வைக்கப்பட்டன. அந்தக் கேள்வி பதில்கள் வருமாறு…

உங்களுக்கு கஷ்டம் வந்ததால்தான் விஸ்வரூபம் எடுத்துள்ளீர்களா?

“இனிமேல்தான் மக்களுடன் சேர்ந்து விஸ்வரூபம் எடுக்கவிருக்கிறேன்.”

உங்கள் வழிகாட்டி யார்? காந்தியா, அம்பேத்கரா, பெரியாரா காமராஜரா?

“நீங்கள் எத்தனை சாமிகள் கும்பிடுகிறீர்கள். அதைப்போல் எனக்கு அம்பேத்கர், காமராஜர், காந்தி, நேரு, அரவிந்த் கேஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் என்று எல்லோரையும் பிடிக்கும்.

நீங்கள் எப்படி ஊழலை ஒழிக்கப் போகிறீர்கள்?

“நான் அல்ல; நாம் எல்லோரும் சேர்ந்துதான் ஊழலை ஒழிக்க முடியும். தனிமரம் தோப்பாகாது. வாங்க எல்லோரும் சேர்ந்து ஒழிப்போம்.”

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும் ஸ்கூட்டரும் போன்ற இலவசங்களை வழங்குவீர்களா?

“நான் ஆட்சிக்கு வந்தால் ஸ்கூட்டரை நீங்கள் மற்றவர்களுக்கு வாங்கித் தரும் அளவுக்கு வேலைவாய்ப்பை உயர்த்துவேன்.”

மரபணு மாற்றப்பட்ட விதை என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். தலைப்புச் செய்தியாக மட்டுமே இருக்க முடியும் என்று தமிழிசை சொல்கிறார். உங்கள் பதில் என்ன?

“விமர்சனங்களுக்குப் பதிலளிக்கவா, வேலையைப் பார்க்கவா?” என்று சிரித்த கமல்ஹாசன், இறுதியாக, “வாழ்க பல்லாண்டு! வாழிய நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு” என்று முடித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − 3 =

*