;
Athirady Tamil News

ரஜினியை ரகசியமாக சந்தித்து கட்சி தொடங்கப் போவதை தெரிவித்த கமல்..!! (வீடியோ)

0

நடிகர் கமல்ஹாசன் ஒரு வார பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

ஆசான்களைப் பார்ப்பதற்கு முன்பே, நண்பர் ரஜினி சாரை சந்தித்து விட்டேன். அப்போது, சென்னைப் புறநகர், பூந்தமல்லியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

அந்தத் தளத்துக்கு அருகிலேயே ‘காலா’ படப்பிடிப்பில் அவர் இருந்தார். “சந்திக்கலாமா, அதுவும் ரகசியமாக” என்று கேட்டேன். “எங்கு வரலாம்” என்று பேசி விட்டு, தனியாக காருக்குள் அமர்ந்து பேசினோம்.

நான் எடுத்த முடிவு, மற்றவர்களுக்குத் தெரியும் முன் அவருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அந்தச் சந்திப்பு. “அப்படியா, எப்ப முடிவெடுத்தீங்க?” என்று ஆச்சரியமாகக் கேட்டார். “மனதளவில் முடிவெடுத்து ரொம்ப நாள் ஆச்சு. ஆனால், காலெடுத்து வைப்பது இப்போதுதான்” என்றேன்.

‘எந்தக் காரணம் கொண்டும் கண்ணியம் குறையக் கூடாது’ என்பதுதான் அன்று நாங்கள் பேசிக் கொண்டதில் முக்கியமான வி‌ஷயம். ஆம், “ஒருவேளை எதிரும் புதிருமாக நின்றாலும் மரியாதை குறைந்து விடக்கூடாது. அந்தப் போர் தர்மம் நமக்கு வேண்டும்” என்றேன். “அப்கோர்ஸ் கமல்”என்றார் அவர்.

முடிவெடுத்திருப்பதைச் சொல்ல அன்று சந்தித்தேன் என்றால், “கட்சி கட்டப் புறப்படுகிறேன்” என்று சொல்ல இப்போது சந்தித்தேன். “வரலாமா” என்று கேட்டேன். “சாப்பிட்டிட்டிருக்கேன். முடிச்சிடுறேன் வாங்க” என்றார். ஆனால், நான் போகும் போது சாப்பிட்டுக் கொண்டுதானிருந்தார்.

ஆம், அவ்வளவு சீக்கிரம் போய்விட்டேன். அதே புரிதலோடுதான் இருக்கிறோம். பேசுகிறோம் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

“ஆமாம்… நீங்ககூட உங்க ரசிகர்கள்கிட்ட, ‘ரஜினியைப் பற்றி ஒரு வார்த்தை தப்பா பேசினீங்கனா எனக்குப் பொல்லாத கோபம் வரும்’ என்று சொன்னீர்கள் என்று கேள்விப்பட்டேன்” என்றார். “ஆமாம், வசவு அரசியல் நமக்குத் தேவையில்லை. நீங்களும் அப்படித்தான் இருக்கணும் என்று நான் சொல்லவே மாட்டேன். ஏன்னா, நீங்க கண்டிப்பா அப்படித்தான் இருக்கீங்கன்னு தெரியும். இல்லாத அரசியல் மாண்பை நாம் இருக்கச் செய்ய வேண்டும். நாமளாவது அதைச் செய்வோம்” என்றேன்.

ஆமாம், நாங்கள் நினைத்திருந்தால் வாடாபோடா நண்பர்களாகவே இருந்திருப்போம். ‘நாங்கள் அப்படி இல்லை’ என்று 25 வயது இளைஞர்களாக இருக்கும்போதே முடிவு செய்து விட்டோம்.

அரசியலைப் பற்றி பேச்சு திரும்பியது. “எவ்வளவு பெரிய ஆட்கள் இருந்த இடம்.” என்றார். “நாமெல்லாம் ரொம்பச் சின்னவங்க என்று நீங்கள் நினைத்தால் கூட மக்கள் அதையெல்லாம் விரும்புகிறார்கள்.

அதற்குக் காரணம், யாராவது வர மாட்டார்களா என்ற ஏக்கம். அதற்குப் பெயர் வெற்றிடம் இல்லை. தாளாத பசியும் தாக்கமும். நமக்கும் கடமை இருக்கிறது. நான் ஆரம்பிச்சிடுறேன்” என்றேன். வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

காவியைக் கொச்சைப்படுத்துகிறார் கமல்ஹாசன் என்கிறார்கள். அது தவறு. அந்தத் தியாகத்துக்கான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன் தேசியக் கொடியிலேயே அதுக்கான இடம் இருக்கிறது. ஆனால் கொடி முழுவதும் அதுவாகப் பரவிவிடக் கூடாது என்கிறேன்.

மற்றவர்களுக்கான இடமும், மரியாதையும் கொடுப்போம். அதுதானே நாம் எடுத்துக்கொண்ட உறுதி மொழி. அரசியலமைப்பிலும் அதுதானே குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்ததால் இவர்கள் ஒரே குடும்பம் என்று நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். அவர்களுக்குள் என்ன வேறுபாடு இருந்தாலும் அவர்கள் ஒன்றாக இருந்து ஒரே இலக்குக்காகப் போராடியிருக்கிறார்கள்.

காந்தியாரிடம் இந்திய அரசியலமைப்பை எடுத்துச் செல்லும் போது அம்பேத்கர் போகாமல் இருந்திருப்பாரா? அப்படிப் போகவில்லை என்றால்கூட இதை அம்பேத்கர்தான் தலைமையேற்றுச் செய்து கொடுத்திருக்கிறார் என்பது காந்தியாருக்குத் தெரியாமல் இருந்திருக்குமா?

காந்தியின் கடும் விமர்சகர் என்பது ஞாபகம் இருக்காதா? இருந்தாலும் அந்த வேற்றுமைகளை எல்லாம் தூக்கி வைத்துவிட்டு நாடு ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்ட அந்தப் பெரிய மனிதர்களிடம் கற்றுக் கொண்ட பாடங்களை எல்லாம் தொலைத்து விடக்கூடாது.

அதை உங்களுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கும் ஒரு போஸ்ட்மேனாக என் பயணத்தை தொடர்கிறேன். நாளை நமதே, நல்ல மனிதம் படைப்போம் வாருங்கள்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*