;
Athirady Tamil News

இறுதி சடங்கின்போது சவப்பெட்டியில் இருந்து உயிருடன் எழுந்த வியாபாரி..!!

0

சேலம் பெரமனூர் நாராயணப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 55). இவர் வீட்டில் வைத்து இட்லி, புரோட்டா, தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார். மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேலம்-பெங்களூரு சாலையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கிட்னி செயல் இழந்துவிட்டதாகவும், ரூ. 6 லட்சம் செலவாகும் என்றும் கூறினர். அதற்கு சம்மதித்த உறவினர்கள் சிகிச்சை அளிக்குமாறு கூறினர். உடனே டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர்.

கடந்த ஒரு வாரமாக உறவினர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதற்கிடையே அவர் பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்ததால் தனியாக இருப்பதால் இந்த நிலைக்கு வந்ததாகவும் உறவினர்களுடன் பேசினால் சகஜ நிலைக்கு திரும்புவார் என்றும் கூறிய டாக்டர்கள் தனி அறைக்கு அவரை மாற்றினர்.

அப்போது உடலில் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாய்கள் நீக்கப்பட்டதால் கடந்த திங்கட்கிழமை அன்று கோமா நிலைக்கு சென்றார். இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் டாக்டர்களிடம் கேட்டபோது கிறிஸ்டோபரின் மூளைக்கு ரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்லாததால் அவர் மூளைச் சாவு அடைந்து விட்டதாகவும் இனி உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை, உறவினர்களுக்கு சொல்லி இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றும் கூறினர். மேலும் 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆஸ்பத்திரிக்கு கட்டிய நிலையில் மீதம் உள்ள ரூபாயையும் டாக்டர்கள் கேட்டனர். ஆனால் அதை அவர்கள் கொடுக்கவில்லை.

இதையடுத்து உறவினர்களும் கிறிஸ்டோபரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த பிரீஷ்சர் பாக்ஸில் வைத்துக்கொண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.

அப்போது திடீரென்று கிறிஸ்டோபருக்கு இருமல் எடுத்தது. தொடர்ந்து அவர் எழுந்திருக்க முயன்றார். இதைப்பார்த்த உறவினர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இதைப்பார்த்து துக்கம் விசாரிக்க வந்த பொதுமக்கள் தாங்கள் காண்பது கனவா? அல்லது நனவா? என அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மேலும் அவர் உயிருடன் இருப்பதை அறிந்த உறவினர்கள் உடனே அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்ததாக கூறினார்களே தற்போது எப்படி உள்ளது? என்று உறவினர்கள் கேட்டனர். அப்போது மூளை சரியாக இயங்கி வருகிறது. அதில் எந்த பாதிப்பும் இல்லை என்று டாக்டர்கள் கூறி உள்ளனர்.

இதனால் அவர் உறவினர்களிடம் மெலிந்த குரலில் பேசி வருகிறார். உறவினர்கள் அவ்வப்போது அவரை சந்தித்து தேற்றி வருகிறார்கள்.

இந்த சம்பவம் கிறிஸ்டோபரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + six =

*