;
Athirady Tamil News

நாளை ஆரம்பமாகவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த உற்சவத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி…!!

0

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பக்கதர்களுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24 ) மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

யாழ்மாவட்ட அரசாங்க அதிபரும் கடற்படையினரும் இணைந்து பக்கதர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் செய்துவருகின்றனர்.

இம்முறை இந்தியாவிலிருந்து 2103 பக்தர்களும் இலங்கையிலிருந்து சுமார் 8ஆயிரம் பேரும் புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக இராணுவப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

பக்தர்களின் நலன் கருதி நிரந்தர மலசல கூட வசதிகள் மற்றும் மேலதிகமாக தற்காலிக மலசலகூட வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாளை யாழ்ப்பாணத்தில் இருந்து குறிக்கட்டுவன் வரையான பேருந்து சேவை அதிகாலை 4 மணியிலிருந்து நண்பகல் ஒரு மணிவரை இடம்பெறும்.

அதே போன்று குறிகட்டுவானில் இருந்து கச்சதீவு வரை காலை 5 மணி முதல் 2 மணி வரை நடைபெறும். படகுச்சேவைக்கான ஒருவழி கட்டணமாக 300 ரூபா அறவிடப்படவுள்ளது. நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழிக் கட்டணமாக 225 ரூபா அறவிடப்படவுள்ளது.

அத்துடன் சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளன.

இம்முறை பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் 200 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும் திருவிழா ஏற்பாடுகள் குறித்து யாழ்மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவிக்கையில்,

ஒவ்வொருவருடமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வந்தாலும் இந்த வருடத்திலிருந்து சனிக்கிழமைகளில் புனித அந்தோனியாரின் திருவிழா கொண்டாடப்படவிருக்கின்றது.

தவக்காலத்திலே வருகின்ற ஞாயிறு தினங்களுக்கு முன்னுரிமைகொடுக்கவேண்டும் என்பதற்காக இந்தவருடத்திலிருந்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாளை மறுதினம் சனிக்கிழமை இவ்வாண்டுக்கான திருவிழா கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்னைய நாளான நாளையதினம் வெள்ளிக்கிழமை மாலை திருச்சிலுவை பாதை , நற்கருணை ஆராதனை போன்ற வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

வழமை போல் யாழ் மறைமாவட்டத்திலிருந்தும் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையின் தென்பகுதியிலிருந்தும் ஏறக்குறைய 10ஆயிரம் யாத்திரிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த விழாவிற்கான சகல பொறுப்பாகவும் நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்திரு எமில் போல் அடிகளாரும் , திருவிழாவிற்கான ஏற்பாடுகளை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அனைவரும் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாத்திரிகளுக்கான சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாளை மற்றும் நாளை மறுதினம் யாத்திரிகளுக்கான போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .

இந்த வருடம் கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தள விழா யாழ் மறைமாவட்ட ஆயர் பேரரர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையுடன் இணைந்து காலி மறைமாவட்ட ஆயர் பேரர் திரு பிறேமன் விக்கிரமசிங்க ஆண்டகையும்; கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.

யாழ் மறை மாவட்டத்திலிருந்தும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் ஏராளமான குருக்கள் துறவிகள் அருட்சகோதரிகள் இறைமக்களும் இந்த விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − thirteen =

*