;
Athirady Tamil News

அதிர்ந்த அரசியல் கட்சிகள், குழப்பிய கமல்..!! (படங்கள்)

0

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது தமிழர்களை அநாகரிக வார்த்தைகளால் ட்விட்டரில் சுப்பிரமணிய சுவாமி வசைபாடியபோது தமிழக அரசியல்வாதிகள் மெளனம் காத்தனர். அதற்கு எதிர்வினையாற்றி சுவாமியை உலுக்கி எடுத்த கமல்ஹாசனின் ட்விட் சர்வதேசத் தமிழர்களின் கவனத்தைக் கவர்ந்தது. அதன் தொடர்ச்சியாக கமல்ஹாசன் ட்விட் தமிழக அரசியல்வாதிகளின் தூக்கத்தைக் கெடுத்தது.

அனைத்து அரசியல் நிகழ்வுகள் பற்றியும் தன் நிலைபாட்டைத் தயக்கமின்றி ட்விட்டரில் பதிவு செய்துவந்தார் கமல். அதிமுக அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு உளர ஆரம்பித்ததன் விளைவு, ‘ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்கின கதையாக’ என்ற கிராமத்துப் பழமொழி போல் சினிமாவுக்குள் இருந்த கமலை தமிழக அரசியல் அரங்கில் பெரியாளாக்கிய பெருமை அதிமுகவுக்கே உரியது.

ஒரு கட்டத்தில் இது அதிமுக-பாஜக தலைவர்களால் லாவணிச் சண்டையாக்கப்பட்டு “வந்து பார்” என்றார்கள். “அப்படியா வந்துட்டேன்” என்று மதுரையில் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார் கமல்.

தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் அரசியல் கட்சித் தொடங்குவதை இங்குள்ள அரசியல் கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. கமல் கட்சியின் கொள்கை என்ன, மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்பது கமலுக்கே புலப்படாத நிலையில் நேற்று (பிப்ரவரி 21) காலை முதல் அவரது அரசியல் பிரவேசம் குறித்து மாநிலக் கட்சிகள் முதல் தேசியக் கட்சிகள் வரை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியதை தமிழ்த் தொலைக்காட்சிகள் உயரத் தூக்கிப்பிடித்தன. அதே நேரம் அப்துல் கலாம் வீட்டில் கமல் கால்பதித்த நொடியிலிருந்து மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டம் வரையிலான நிகழ்வுகளை நேரலையாக்கி வியாபாரமும் செய்தார்கள்.

தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்களைத் தன்னைச் சுற்றி வைத்திருக்கும் கமல் அவர்கள் வடிவமைத்துக் கொடுத்த பயணத் திட்டத்தில் காலை முதல் ஒத்தக்கடை மேடையேறும் வரை சரியாகவே பயணப்பட்டார். தலைமை உரையை எந்த வித குறிப்புகளுமின்றித் தொடங்கியபோது மிகச் சிறந்த அரசியல்வாதியாகப் பக்குவப்பட்ட பாணியில் பேசத் தொடங்கினார். இதைத் தொலைக்காட்சி நேரலையில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பார்த்திருப்பார்கள்.

பொதுவாக கமல் பேசும் மொழிநடை பிறருக்குப் புரியாது என்பது சினிமா பத்திரிகையாளர்கள் அடிக்கும் கமெண்ட். வழக்கமான தனது பேச்சுநடையைப் பாமர மொழிக்கு மாற்றித் தரமான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு பற்றி சரளமாகப் பேசிய கமல், கழுவுற மீனில் நழுவிய மீனாகத் தனது கட்சியின் அரசியல் நிலைபாட்டை, கொள்கை என்ன என்பதை இறுதி வரை அறிவிக்கவில்லை.

“எல்லா நல்ல முதல்வர்களும் செய்யக்கூடியதை நாமும் செய்வோம்” என்றவர், அந்த நல்ல முதல்வர் சந்திரபாபு நாயுடுவா, பினராயி விஜயனா, தன் பொதுக் கூட்டத்துக்கு வந்திருந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலா என்பதை அடையாளப்படுத்தாமல் குழப்பினார்.

இடதும் இல்லை வலதும் இல்லை என்றவர் தான் யார் என்பதை அறிவிப்பதிலும் குழப்பினார். இடதுசாரிகளுக்கு மதவாதக் கட்சி எதிரி, காங்கிரசுக்கு பாஜக எதிரி, அதிமுகவுக்கு திமுக எதிரி, இவர்கள் ஆண்ட தமிழகம் பாழ்பட்டு சீரழிந்திருப்பதைச் சீர்படுத்தப் போகிறேன் என கர்ஜிக்கும் கமல் இக்கட்சிகளில் எதை எதிர்த்து அரசியல் செய்யப் போகிறார் என்பதில் குழப்பமாக இருப்பதை அவரது உரை உறுதிப்படுத்துகிறது.

மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறும் நாடகத்தை இறுதியில் அரங்கேற்றினார். கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமான பழக்கத்தில் இருந்தவர் கமல். அவரிடமிருந்து தமிழைக் கற்றுக்கொண்டதாகக் கூறுவது வழக்கம். கேள்வியிலேயே துணைக் கேள்வியை உருவாக்கி பதில் கூறுவது கருணாநிதியின் பாணி. இதனை நேற்று பொதுக்கூட்ட மேடையில் பாரதி கிருஷ்ணகுமார் மக்கள் கேட்ட கேள்வி எனப் படித்த அனைத்துக்கும் அதில் இருந்தே கேள்வியை உருவாக்கி பதிலாகக் கூறினார்.

தன் கட்சி, தன் நிலைபாடு என்ன என்பதை இறுதி வரை அறிவிக்காமலே குழப்பினார் கமல்ஹாசன். தமிழக அரசியல்வாதிகளைப் பெயர் குறிப்பிடாமல், கடுமையாக விமர்சிக்காமல் அதே நேரம் “நீங்கள் ஒழுங்காக மக்களுக்கான தேவைகளைச் செய்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேன்” என்று வஞ்சப்புகழ்ச்சி வாசித்த கமல், “இப்போதும்கூட எல்லாம் செய்துவிட்டீர்கள் என்றால் நாங்கள் போய்விடுவோம்” என்று குழப்பத் தவறவில்லை.

மிகச் சிறந்த திரைக்கதையில் கிளைமாக்சில் கதையாசிரியர் குழப்புவதைப் போல, நேற்றைய பொதுக்கூட்டத்தில் கமல் குழப்பியிருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் பொருளாதாரக் கொள்கை என்ன என்பதை அறிய தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*