;
Athirady Tamil News

மைத்திரியிடம் இருந்து 25 உறுப்பினர்கள் மஹிந்தவுடன் சங்கமம்…!!

0

ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் புதிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் வலியுறுத்தியுள்ளதுடன் அதற்காக ஒரு மாதக்காலக்கெடுவையும் சுதந்திரக் கட்சிக்கு வழங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட ஒருமாதகாலத்திற்குள் ஆட்சியை அமைக்கத் தவறினால் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக மஹிந்த அணியின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த கட்சித் தாவல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள 6 அமைச்சர்கள் இன்றைய தினமும் கூட்டு எதிரணியினருடன் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் மஹிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்பாராத வெற்றியை பெற்றதால் ஆட்சியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலனா தேசிய அரசாங்கத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் ஜனாதிபதி மைத்ரபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியினரின் பெரும்பாலானவர்கள் அதற்கு இணங்காது தொடர்ச்சியாக தேசிய அரசாங்கத்தை கலைத்துவிட்டு சுதந்திரக் கட்சி தலைமையில் தனியாட்சியை அமைப்பதற்கு பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக பாராளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஒன்றிணைந்த எதிரணியினருடன் பலசுற்றுப் பேச்சுக்களையும் நடத்தியிருந்த நிலையில் இறுதியில் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருந்தன.

இந்நிலையில் ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் பிரதான பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமய கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனியாட்சி அமைப்பதற்கு சுதந்திரக் கட்சியினர் ஒருமாத கால அவகாசத்தை வழங்கியிருப்பது குறித்த தகவலைத் தெரிவித்தார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாட்சியை அமைக்க பெரிதும் முயற்சிகளை மேற்கொண்டது. நேற்று முன்தினம் சுதந்திரக் கட்சியினரை அழைத்த ஜனாதிபதி, ஒருமாத கால அவகாசத்தை கோரியிருந்தார். நெருக்கடி வரும்போது காலதாமதத்தை ஏற்படுத்துவதே பிரதமரதும் செயற்பாடாகும். அதன் பிரதிபலனாகவே நீண்டகாலமாக எதிர்கட்சித் தலைவர் பதவியை வகித்த சாதனையை ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தியுள்ளார்.

அதிகளவான தேர்தல் தோல்விகளை எதிர்கொண்டு தலைவர் பதவியை தக்கவைத்துக் கொண்டவரும் அவரே. அதனால் இலங்கையர் ஒருவரது பெயர் கின்னஸ் புத்தகத்திற்கு செல்வது பெருமைதான். இருந்த போதிலும் சுதந்திரக் கட்சியிலுள்ள அமைச்சர்கள் இன்று கலக்கமடைந்துள்ளனர். பிரதமர் மீது பகிரங்க வார்த்தை தாக்குதலை நடத்திய பின்னர் அமைச்சரவைக்குச் சென்று அவரது நிர்வாகத்தில் இருக்க அமைச்சர்களுக்கு சஞ்சலமாக உள்ளது.

அதனால் இன்றும் சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் என்னுடன் கலந்துரையாடினார்கள். ஒருமாத காலத்திற்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காவிட்டால் 16 தொடக்கம் 25 வரையான அமைச்சர்கள், உறுப்பினர்கள் தங்களுடன் வந்து ஒன்றிணைந்த எதிரணியில் இணைந்து கொண்டு அமர்வோம் என்று என்னிடம் அவர்கள் கூறினார்கள்” என்றார்.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை விலகுமாறு தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பகிரங்கமாகவே வலியுறுத்தியுள்ள போதிலும் ரணில் விக்கிரமசிங்க எதேட்சாதிகாரமாக பதவியில் நீடிப்பது அரசியல் யாப்பிற்கு முரணானது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணிலின் இந்த நடவடிக்கைக்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள அவர் இதனாலேயே அதிருப்தியில் இருக்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் இணைந்து அரசியல் யாப்புக்கு முரணாகவும் மக்களின் ஆணைக்கு முரணாகவும் ஆட்சியில் இருக்கும் இந்த அரசாங்கத்தை விரட்ட தீர்மானித்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த உதய கம்மன்பில மேலும் தெரிவித்திருக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + seven =

*