;
Athirady Tamil News

ஐ.நாவின் தீர்மானத்தை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும்…!!

0

ஸ்ரீலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சமபந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிற்கு விஜயம்செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னெர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட் பைசெனியஸ் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவரை இன்றைய தினம் பாராளுமன்றத்திலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடிய போதே இதனை வலியுறுத்தியிருக்கின்றார்.

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆளும் கட்சியான குடிரசுக் கட்சியின் விஸ்கொன்சின் பிராந்திய காங்கிரஸ் சபை உறுப்பினரான ஜேம்ஸ் சென்சென்பிரினெர் கொழும்புக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜெனீவாவில் அடுத்தவாரம் 26 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே ஆளும் குடியரசுக் கட்சியின் மூத்த காங்கிரஸ் உறுப்பினரான ஜேம்ஸ் சென்சென்பிரினெர் கொழும்புக்கு விஜயம் செய்திருக்கின்றார்.

அமெரிக்க காங்கிரஸ் சபையின் நீதித்துறைக்கான நிலையியற் குழுவின் முன்னாள் தலைவரான ஜேம்ஸ் சென்சென்பிரினெருடன் அவரது தலைமை அதிகாரி மெட் பைசென்ஸேனிசும் கொழும்பு சென்றுள்ளார்.

இவர்கள் இன்றைய தினம் ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத்திற்கு விஜயம்செய்த நிலையில் அங்குள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது ஸ்ரீலங்கா ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட தாமதங்களை சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேசத்திற்கும் நாட்டு மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரிடம் சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை இன்றைய சந்திப்பின்போது அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் இரா. சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இரா. சம்பந்தன் இந்த நடைமுறைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு சாதகமான முடிவினை எட்ட வேண்டியது அவசியம் என்றும் இதற்கு அமெரிக்கா உட்பட சர்வதுச சமூகம் ஸ்ரீலங்காவிற்கு அழுத்தம்கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இன்றைய சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்ப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 15 =

*