;
Athirady Tamil News

ஐஎன்எக்ஸ் வழக்கு – கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது 6ம் தேதி விசாரணை..!!

0

ப.சிதம்பரம் மந்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம், 2007-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி அளவுக்கு முதலீடுகளை திரட்டுவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் அளித்தது. இதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவி செய்திருக்கிறார். இதற்காக அவரது நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து லஞ்சப் பணம் வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மீண்டும் மார்ச் 1-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனுக்கு தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறையின் சம்மனுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைக்கும்படி யோசனை தெரிவித்தனர்.

இதையடுத்து கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை மார்ச் 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

எனவே, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து வந்ததும் மார்ச் 1-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − four =

*