;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் நியமனம் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது…!!

0

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் நியமனம் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது! வடமகாண சபை உறுப்பினர்

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் நியமனம் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா தெரிவித்துள்ளார்.

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று (23) இடம்பெற்ற முன்னாள் அதிபருக்கான பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு பூராகவும் தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ் அரச நியமனங்கள் தகுதிக்கேற்ப வழங்கப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்படும் போது வடமாகாணத்திற்குரிய நியமனங்கள் பொதுவான ஒரு வெட்டுப் புள்ளியின் கீழ் வழங்கப்படுகின்றது.

அது தவறானது ஆகும். யாழ் மாவட்டத்தைப் விட வடக்கின் ஏனைய மாவட்டங்கள் யுத்தத்தால் மிகவும் பாதிப்படைந்த பின்தங்கிய மாவட்டங்களாகும். அந்த அந்த மாவட்டங்களுக்கு என தனியான வெட்டுப் புள்ளிகளும் யாழ்ப்பாணத்திற்கு தனியான வெட்டுப் புள்ளிகளும் இடப்பட்டு நியமனம் வழங்கும் போதே யுத்தத்தால் பாதிப்படைந்த வன்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் நியமனங்களைப் பெற முடியும்.

வடமாகாணத்திற்கு என ஒரே வெட்டுப் புள்ளியை நியமனம் வழங்கும் போது பயன்படுத்துவதால் வன்னி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்படுகின்றது.

வடக்கில் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட வடமாகாண சபை நியமனங்களைக் கூட இவ்வாறு சீராக சமத்துவமாக மாவட்ட பங்கீட்டு அடிப்படையில் வழங்கமுடியாத நிலையில் எவ்வாறு சிங்கள பிரதிநிதிகள் அதிகமாக இருக்கும் பாராளுமன்றத்தில் நீதியைப் பெற முடியும்.

அடுத்த சில நாட்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறவிருந்த நிலையில் ஆளுனர் மற்றும் முதலமைச்சர் தலையிட்டு இடைநிறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து நடைபெறவிருந்த நேர்மக தேர்வை தடுத்து நிறுத்தியமையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடக்கு ஆளுனர் ஆகியோர் இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அல்லது வடக்கின் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாகாணசபையில் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*