;
Athirady Tamil News

‘மாற்றத்தைக் கொண்டுவர நான் ரெடி, நீங்க ரெடியா?’ பொதுமக்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அழைப்பு..!!

0

‘மாற்றத்தைக் கொண்டுவர நான் ரெடி, நீங்க ரெடியா?’ என்று தனது அரசியல் கட்சியில் சேர பொதுமக்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 21ஆம் தேதி ராமேஸ்வரத்திலுள்ள அப்துல் கலாம் இல்லத்திலிருந்து நாளை நமதே என்ற பெயரிலான அரசியல் பயணத்தைத் தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். அன்றைய தினமே மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆறு இணைந்த கைகள் கொண்ட தனது கட்சிக் கொடியையும் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சிப் பெயரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

கட்சிக் கொடி மற்றும் பெயரை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய கமல்ஹாசன், எல்லா நல்ல முதல்வர்களின் கொள்கையே தனது கொள்கை என்றும் அனைத்துத் தரப்பினருக்கும் தரமான கல்வி வழங்கப்படும்; சாதி மதப் பிரச்னைகள் தடுக்கப்படும் என்றும் கூறினார். அதையடுத்து கட்சியின் அகில இந்தியப் பொறுப்பாளர் மற்றும் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் அந்த மேடையிலேயே அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் அங்கே அறிமுகம் செய்து வைக்கப்பட்டு மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “நான் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது, நீங்கள் எல்லோரும் என்னுடன் இணைய வேண்டும்” என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தார். பொதுக்கூட்ட மேடையிலேயே இந்திய ஆட்சி பணி தேர்வில் வெற்றியடைந்த ரகுராம், திரைப்பட பாடலாசிரியர் சினேகன், நகைச்சுவை நடிகர் வையாபுரி, நடிகர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையை சார்ந்த ராஜேஷ் உள்ளிட்டோர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இணைந்தனர்.

இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 22) நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியில் இணையுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “சாதி அரசியலுக்கு நிகரான கொடுமை எது தெரியுமா, பழகிப்போன அரசியல். அதென்ன பழகிப்போன அரசியல் என்று கேட்கிறீர்களா? ஓட்டுக்குக் காசு வாங்க பழகிட்டோம். கரைவேட்டி கட்டி வருபவர்கள்தான் அரசியல்வாதிகள் என்று நம்ப பழகிட்டோம். விவசாயி எக்கேடு கெட்டு போனா என்ன, நமக்கு சாப்பாடு கெடைச்சா போதும் என்று இருக்க பழகிட்டோம். இப்படியே விட்டா நாடு என்னவாகும், சாக்கடையாகும். அந்த சாக்கடையிலும் இருக்க பழகிட்டோம்னு சொல்லப் போறமா?” என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், “இதை மாற்றுவதற்கு யாரோ தேவதூதன் வருவான் என்று எதிர்பார்க்காதீர்கள். நாம தான் மாத்தணும், நானும் நீங்களும். நான் ரெடி, நீங்க ரெடியா. ரெடின்னா வாங்க” என்று தன் கட்சியில் சேர மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + five =

*