;
Athirady Tamil News

பிரதமர் மோடியுடன் இன்றிரவு எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..!!

0

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5.20 மணிக்கு சென்னை வருகிறார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 5.25 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படும் அவர் 5.45 மணிக்கு நேப்பியர் பாலம் அருகில் உள்ள அடையார் விமானப்படை தளத்தில் வந்து இறங்குகிறார்.

அங்கிருந்து 5.50 மணிக்கு புறப்பட்டு கலைவாணர் அரங்கம் வருகிறார். 6 மணிக்கு அவருக்கு கலைவாணர் அரங்கம் பகுதியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

அதை தொடர்ந்து கலைவாணர் அரங்க வளாகத்தில் நடைபெறும் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

ஸ்கூட்டர் பெறும் 1000 பெண் பயனாளிகள் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 5 பேருக்கு விழா மேடையில் பிரதமர் மோடி ஸ்கூட்டர்கள் வழங்குகிறார்.

அதன் பிறகு பிரதமர் மோடி விழா பேரூரை ஆற்றுகிறார். விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலை வகிக்கிறார்.

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வாழ்த்து வழங்குகிறார்கள்.

விழாவையொட்டி கலைவாணர் அரங்க வளாகத்தில் மரக்கன்றையும் பிரதமர் மோடி நடுகிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும் காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். இரவு கவர்னர் மாளிகையில் தங்குகிறார்.

இரவில் கவர்னர் மாளிகையில் தங்கி இருக்கும் மோடி முக்கிய பிரமுகர்கள் சிலரை சந்திக்க உள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டுள்ளார். இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் இந்த சந்திப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து கட்சியினரும் பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுவதால் அதுபற்றியும் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.

மேலும் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.

பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகள் பற்றி விவாதித்தாலும் இந்த சந்திப்பு அரசியல் கண்ணோட்டத்திலும் பார்க்கப்படுகிறது.

பிளவுபட்ட அ.தி.மு.க.வை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதன் பேரிலேயே இணைத்ததாகவும், அமைச்சர் பதவி ஏற்றுக் கொண்டதாகவும் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.

அப்போது டி.டி.வி.தினகரன் 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறாரா? என்றும் மோடி கேட்டதாக பன்னீர்செல்வம் கூறினார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுவதால் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*