;
Athirady Tamil News

கேரளாவில் திருடன் எனக்கூறி ஆதிவாசி வாலிபரை அடித்து கொன்ற கும்பல்: 7 பேர் கைது..!!

0

கேரள மாநிலம் அட்டப்பாடியை அடுத்த முக்காலி கிராமத்தைச் சேர்ந்தவர் மது, (வயது 27).

ஆதிவாசி இனத்தை சேர்ந்த மது அப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் வசித்து வந்தார். அடிக்கடி கிராமத்திற்கு சென்று உணவு பொருட்கள் வாங்கி செல்வார். நேற்று முன்தினம் இது போல கிராமத்திற்கு சென்று உணவு பொருட்கள் மற்றும் அரிசி வாங்கி விட்டு காட்டுப்பகுதிக்கு சென்றார்.

மது, அரிசி வாங்க சென்ற கடை வீதியில் அடிக்கடி அரிசி திருட்டு சம்பவங்கள் நடந்தது. இதில், மதுவுக்கு தொடர்பு இருக்குமென்று கடைக்காரர்கள் சந்தேகப்பட்டனர். நேற்று முன்தினம் மது, அரிசி மூட்டையுடன் சென்றதை கண்டதும் அவர், அரிசி திருடிச்செல்வதாக நினைத்தனர்.

இதையடுத்து அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மதுவை மடக்கி பிடித்தனர். சரமாரியாக அடித்து உதைக்கவும் செய்தனர். பின்னர் அவர் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து கைகளையும் கட்டி தாக்கினர். வலி தாங்க முடியாமல் மது அலறினார்.

அப்படியும் பொதுமக்கள் அவரை தாக்குவதை நிறுத்தவில்லை. மாறாக ஏராளமானோர் சூழ்ந்து நின்று கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

கடை வீதியில் மது, தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய காட்சிகளை அப்பகுதி வாலிபர்கள் செல்போனில் பதிவு செய்தனர். மனசாட்சி இல்லாத சிலர், மது அடிவாங்கி சாய்ந்த காட்சிகளை செல்பி எடுத்தனர்.

இந்த காட்சிகளை உடனே வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றினர். இது கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் வைரலாக பரவியது. சமூக ஆர்வலர்கள், ஆதிவாசி நல கமி‌ஷன் உறுப்பினர்கள் பார்வைக்கும் இந்த காட்சிகள் சென்றன. உடனடியாக அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி அட்டப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதிவாசி வாலிபர் மதுவை மீட்டு போலீஸ் ஜீப்பில் ஏற்றினர்.

கட்டி வைத்து தாக்கப்பட்ட மது.

ஜீப்பில் ஏறியதும் மது போலீசாரிடம், இங்கிருந்த அனைவரும் என்னை கொடூரமாக தாக்கினர். அடித்து உதைத்தனர். திருடன் என்று கூறி என்னை தகாத வார்த்தைகள் பேசினர். நான், எந்த தவறும் செய்யவில்லை என்றார்.

இவ்வாறு கூறி முடித்ததும் ஜீப்பிலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மதுவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அட்டப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மது, போலீசாரிடம் கூறிய கடைசி வார்த்தைகளை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தயாரித்தனர். இதில் முதல் கட்டமாக முக்காலி பகுதியைச் சேர்ந்த உசேன், மத்தாச்சன், மனு, அப்துல் ரகுமான், அப்துல் லத்தீப், அப்துல் கரீம், உம்மர் ஆகியோர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், உசேன், கரீம் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆதிவாசி வாலிபர் மது கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார். நாகரீக சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்களுக்கு இடமில்லை. இது கேரளாவிற்கு அவமானம். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க திருச்சூர் சரக ஐ.ஜி. அஜித்குமாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஐ.ஜி. அஜித்குமார் தலைமையிலான போலீசார் அட்டப்பாடி சென்று விசாரணையில் இறங்கி உள்ளனர்.

மது கொலை செய்யப்பட்டதை அறிந்து அவரது தாயார் மற்றும் சகோதரிகள் அட்டப்பாடி வந்தனர். அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மதுவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மதுவின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை பிரேத பரிசோதனை நடத்தக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். இதையடுத்து இன்று மதுவின் உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது.

இதற்கிடையே மதுவின் மரணத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி இன்று பாலக்காடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 5 =

*