சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் வழக்கு..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இவர் நிதி மந்திரியாக இருந்த போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல ஐ.என்.எஸ். மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு அளிக்கப்பட்டதிலும் வீதி மீறல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறது.
இந்த சோதனையின் போது ரகசிய ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினருக்கு எதிராக ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறி இருப்பதாவது:-
சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையினரும் அடிக்கடி சோதனை நடத்துகிறார்கள். கண்ணியத்தை குலைக்கும் வகையில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது. கண்ணியத்தை கெடுக்கும் வகையில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வேட்டையாடுகிறது. இது அரசியல் பழிவாங்கும் முயச்சியாகும். அடிக்கடி சோதனை, தேவையில்லாத விசாரணை, சட்ட விரோதமான முடக்கம், தவறான தகவல்களை வெளியிடுதல் போன்ற மோசமான செயல்களில் ஈடுபட்டுள்ளன. இதில் இருந்து எனது தனி உரிமையும், கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. #tamilnews