;
Athirady Tamil News

தலைமைத்துவம் உட்பட பலவற்றில் பாரிய மாற்றம் – பிரதமர் ரணில் தலைமையில் குழு…!!

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உட்பட அனைத்து மட்டங்களிலும் பாரிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்றை அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அங்கம் வகிக்கும் இந்தக் குழுவினர் ஒரு மாதகாலத்திற்குள் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புக்கள் தொடர்பிலான திட்டத்தை வகுக்கும் என்று பிரதமர் ஊடகங்களுக்கு அறிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த மறுசீரமைப்புப் பணிகள் அனைத்தும் 2015 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய தேசிய அரசாங்கத்திற்கான ஆணைக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறித்த குழுவிடம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்து கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைப் பதவி தொடர்பில் வெளியில் இருந்தும் அதேபோல் கட்சிக்குள் இருந்தும் எதிர்ப்புக்கள் எழுந்தன.

இதனையடுத்து கட்சியில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் ரணில் அதற்காக குழுவொன்றை அமைப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களை அழைத்து பிரதமர் ரணில் கலந்துரையாடினார்.

இதன்போதே கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்ந்து திட்டங்களை வகுப்பதற்காக குழுவொன்றை ரணில் நியமித்துள்ளார்.

இதன்போது அமைச்சரவை மாற்றத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டதாக கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் குறிப்பிட்டார்.

நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த ரணில் அதனால் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.

இதனாலேயே அரசாங்கத்திலும் – கட்சிக்குள்ளும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதற்காகவே நேற்றைய தினம் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டதாகவும் ரணில் தெரிவித்தார்.

இன்றைய கலந்துரையாடலுக்கு அமைச்சர்களான சஜித் பிறேமதாச நவீன் திஸாநாயக்க அகில விராஜ் காரியவசம், சாகலரத்நாயக்க, அஜித் பீ பெரேரா, ஹர்ஷ டி சில்வா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 6 =

*