;
Athirady Tamil News

நல்லாட்சி அரசாங்கத்தின் மறுசீரமைப்பில் சில மாற்றங்கள்…!!

0

ஸ்ரீலங்காவின் ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு, அதன் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக காணி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இரண்டாவது கட்ட மறுசீரமைப்பு பணிகள் பின்னர் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாக அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.

இதன்பிரகாரம் இன்று மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பின் பிரகாரம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவிடம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு பதவியும் காணப்படுகின்றது.

இதற்கு முன்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பொறுப்பை சாகல ரத்நாயக்க வகித்திருந்தார்.

அரச தொழில்முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக லக்ஷ்மன் கிரியெல்ல பெயரிடப்பட்டுள்ள அதேவேளை உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக கபீர் ஹாசீம் செயற்பட்டிருந்தார்.

இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்நாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.

டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக ஹரீன் பெர்ணாண்டோவும் வனஜிவராஜிகள் மற்றும் மீள் புதுப்பிக்கதக்க சக்தி அபிவிருத்தி அமைச்சராக ரவீந்திர சமரவிக்ரமவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே பெயரிடப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக அஜித் பீ பெரேரா பெயரிடப்பட்டுள்ள அதேவேளை குருநாகல் மாவட்ட தேசிய பட்டியல் உறுப்பினர் ஜே.சி அலவத்துவல உள்விவகார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சராக அஜித் பீ பெரேரா இதற்கு முன்னர் செயற்பட்டிருந்தார்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா பெயரிடப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் பிரதி வெளிவிவகார அமைச்சராக ஹர்ஷ டி சில்வா செயற்பட்டிருந்தார்.

பாரிய அளவான மாற்றம் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படவில்லை என ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சித் மத்தும பண்டார, சஜித் பிரேமதாச மற்றும் கயந்த கருணாத்திலக ஆகியோருக்கான அமைச்சு பதவிகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

எதிர்வரும் வாரங்களில் இன்னும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கயந்த கருணாதிலக ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக வசந்த சேனாநாயக்கவின் பதவியிலும் மாற்றம் செய்யப்படவில்லை.

எனினும் அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் தனது அதிருப்தியை வசந்த சேனாநாயக்க ஊடகங்களுக்கு பதிவுசெய்திருந்தார்.

நாட்டியத்தின் முதல் பகுதியை அரசாங்கம் அரங்கேற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மக்கள் கவலை அடைவார்களா கண்ணீர் விடுவார்களா என்பது தெரியாது எனவும் வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*