;
Athirady Tamil News

இனியும் தாமதிக்கக்கூடாது – முதலமைச்சர் சீ.வீ…!!

0

தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது என சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கட்டத் தொடர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து தெரிவித்த முதலமைச்சர், ”2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 30/01 என்ற பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறை வேற்றப்பட்டது. அதன் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு பல கடப்பாடுகள் இருந்தன. அவற்றை நிறைவேற்ற இரண்டு ஆண்டு காலம் கொடுக்கப்பட்டது.

ஆனால் அவற்றை நிறை வேற்றாமலேயே இலங்கை அரசாங்கம் தாமதப்படுத்திவந்தது. கடந்த மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இதற்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. பொறுப்புக் கூறலை உள்ளடக்கிய நிலைமாறு கால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் அதன்போது வழங்கப்பட்டது.

தற்போதைய இலங்கை ஆட்சியாளருக்குச் சர்வதேச சமூகமும் சாதகமான முறையிலேயே அப்போது இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. எனினும் அரசாங்கம் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை.

தற்போது ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் அடுத்த வாரம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எவை நிறைவேற்றப்பட்டன?

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு இப்போது ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் அது செயற்படத் தொடங்கப்படவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மூலம் கைதான பலர் இன்னமும் தடுப்பில் உள்ளனர். சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இன நெருக்கடிக்கான அரசியலமைப்பு மூலமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையும் தற்போது இல்லை எனவும் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை அடுத்து கூட்டரசாங்கம் அதனை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்பதே யதார்த்தம். இந்த நிலையில் சர்வதேசம் என்ன செய்யப்போகின்றது. சர்வதேசத்தின் அழுத்தங்களால் மட்டும் தான் இங்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும்” என்று அவர் ம் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + eleven =

*