;
Athirady Tamil News

சரத் பொன்சேகாவிற்கு சட்டம் – ஒழுங்கு அமைச்சு…!!

0

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை தற்காலிகமாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகத் தெரவிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல தகுதிவாய்ந்த அமைச்சரான சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன விரைவில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கடும்எ திர்ப்பைத் தெரிவித்ததாலேயே தற்காலிகமான பிரதமர் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை சட்டம் – ஒழுங்கு அமைச்சராக பிரதமர் தற்காலிகமாகவே நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும் நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நடந்துமுடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஆளும் தேசிய அரசாங்கத்தின் இரு பிரதான பங்காளிக் கட்சிகளையும் படுதோல்வியை தழுவச் செய்து வெற்றிவாகை சூட்டியிருந்தது.

இதனால் ஆளும் தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடையே கடும் முரண்பாடுகள் ஏற்பட்டதுடன் அரசாங்கத்திற்குள் பாரிய மாற்றமொன்றை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய கடும் இழுபறிக்கு மத்தியில் பெப்ரவரி 25 ஆம் திகதியான நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர் புதிய அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்போது சட்டம் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். எனினும் தற்போதைய அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக கடமையாற்றிவரும் முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே சட்டம் – ஒழுங்கு அமைச்சராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிரதமர் ரணில் தற்காலிகமாகவே சட்டம் – ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கொழும்பில் வைத்து ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

சரத்பொன்சேகா வெளிநாடொன்றுக்கு சென்றிப்பதால் அவர் வரும் வரை அந்த அமைச்சுப் பதவியை பிரதமர் தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த தெரிவித்தார்.

இதற்கமைய இரண்டு வாரங்களின் பின்னர் சரத் பொன்சேகா நாடு திரும்பியதும் சட்டம் – ஒழுங்கு அமைச்சராக பதவியேற்பார் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் ராஜித்த, எவ்வாறாயினும் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்கு சுதந்திரக் கட்சியின் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தொடர்ந்தும் உறவுகளைப் பேணிவரும் ஒரு சிலரே சரத் பொன்சேகாவிற்கு சட்டம் – ஒழுங்கு அமைச்சை வழங்குவதற்கு எதிர்ப்பை வெளியிட்டுவருவதாக நேரடியாக குற்றம்சாட்டிய அமைச்சர் ராஜித்த அவர்களின் தேவைக்கு ஏற்ப அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தேவையான தீர்மானங்களை பிரதமரும் – ஜனாதிபதியும் கலந்துரையாடி எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த அவர் இதன்போது எந்தவித பக்கச் சார்பும் இன்றி தைரியமாக தீர்மானங்களை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடியவரையே சட்டம் – ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.

முன்னாள் இராணுவத் தளபதியான சரத்பொன்சேகா யாருக்கும் அடிபணியாது தைரியமாக தீர்மானங்களை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய சிறந்த தலைவர் என்பதை ஏற்கனவே நிரூபித்துக் காண்பித்துள்ளதாகவும் குறிப்பிடும் ராஜித்த படையினருக்காக குரல்கொடுத்துவரும் தரப்பினர் சரத் பொன்சேகாவும் நாட்டை மீட்ட படையினருக்கு தலைமை வகித்தவர் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க – சட்டம் – ஒழுங்கு அமைச்சு தற்காலிகமாகவே பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களில் அந்த அமைச்சுப் பொறுப்புக்கள் மற்றமொருவரிடம் வழங்கப்பட்டுவிடும் என்றும் தெரிவித்துள்ள அவர் அதனால் பிரதமருக்கு சட்டம் – ஒழுங்கு அமைச்சை ஒப்படைத்துவிட்டதாக கூறி மக்களை திசை திருப்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இன்னும் ஓரிரு வாரங்களில் மேலும் ஒரு அமைச்சரவை மாற்றம் இடம்பெறவிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் திஸாநாயக்க இதன்போது புதிய சட்டம் – ஒழுங்கு அமைச்சர் பதவியேற்பார் என்றும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 16 =

*