;
Athirady Tamil News

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே கூடாது: தேவேகவுடா வலியுறுத்தல்..!!

0

முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நீர் பிரச்சினையின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வந்தபோது சட்டசபையில் அனைத்துக்கட்சிகளும் பேதங்களை மறந்து வரவேற்று இனிப்பு வழங்கி மகிழ்ந்தன.

இந்த தீர்ப்பில் கர்நாடகத்திற்கு என்ன நன்மை கிடைத்துள்ளது, எதற்காக இனிப்பு வழங்கி கொண்டாடினர் என்று தெரியவில்லை. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் கர்நாடகத்திற்கு உரிய நியாயம் கிடைக்காததால் அந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அப்போது மூத்த வக்கீல் நாரிமனை நேரில் சந்தித்து நான் இதுபற்றி பேசினேன். அப்போது அவர் கோபம் அடைந்தார். ஆயினும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் முடிவை அவரை ஏற்க வைத்தேன்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தீர்ப்பில், ஆட்சேபனைகளை தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு 6 வாரங்கள் காலஅவகாசம் கொடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழ்நாடு எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால் அந்த வாரியம் அமைக்கப்பட்டால், கர்நாடகத்திற்கு ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் பணியை கர்நாடக மாநில அரசு செய்யவில்லை.

தீர்ப்பில் நதியை திருப்பி விடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. பிறகு எப்படி தண்ணீரை மக்களுக்கு கொடுப்பீர்கள்?. 2 தேசிய கட்சிகளும் பாசன பரப்பை அதிகரிக்க ஆர்வம் காட்டவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கர்நாடகத்திற்கு பிரச்சினை தான். நமது மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை. நமக்கு கூடுதலாக 40 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் 14.75 டி.எம்.சி. தான் நமக்கு கிடைத்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை எக்காரணம் கொண்டும் அமைக்கவே கூடாது.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − three =

*