;
Athirady Tamil News

ஸ்ரீதேவி கொலை? சுப்ரமணியன் சுவாமி..!! (வீடியோ)

0

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகப்படுவதாக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி துபாயில் கடந்த 24ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பான தடயவியல் அறிக்கையில், “எதிர்பாராத விதமாகத் தண்ணீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உடற்கூறு அறிக்கையில், “ஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

இதயம் செயலிழந்ததே அவரது மரணத்துக்குக் காரணம் என முதலில் கூறப்பட்ட நிலையில், தண்ணீரில் மூழ்கி மரணமடைந்தார் எனத் தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஸ்ரீதேவியின் உடல் இன்றைய தினத்துக்குள் (பிப்ரவரி 27) இந்தியாவுக்கு எடுத்துவரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான சுப்ரமணியன் சுவாமி சந்தேகம் கிளப்பியுள்ளார். இது தொடர்பாக எ.என்.ஐ. மற்றும் டைம்ஸ் நவ் ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “குளியல் தொட்டியில் ஒருவர் மூழ்கி உயிரிழப்பது என்பது கடினமான ஒன்று. குளியல் தொட்டியில் யாரேனும் தள்ளி, மூச்சு விட முடியாதபடி அழுத்தினால் வேண்டுமானால் மரணமடையலாம். ஸ்ரீதேவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. உடல்நலனில் தீவிர அக்கறை செலுத்துபவர் அவர். யாராவது அவருக்குக் கட்டாயப்படுத்தி மது கொடுத்திருக்கலாம். மருத்துவர்கள் உடனடியாக ஊடகங்கள் முன்பு தோன்றி இதயம் செயலிழந்ததால்தான் அவர் இறந்ததாகக் கூறுகின்றனர். ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் அனைத்தும் சீரானதாக எனக்குத் தெரியவில்லை என்று சொன்னவர், அங்கிருந்த சிசிடிவி கேமரா என்ன ஆனது என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தான் கருதுவதாகத் தெரிவித்துள்ள அவர், “நடிகைகளுக்கும் நிழலுலக தாதா தாவுத் இப்ராஹிமுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவரும் எம்பியுமான அமர் சிங், “ஸ்ரீதேவிக்கு ஹாட் டிரிங்க்ஸ் அருந்தும் பழக்கம் கிடையாது. சில நேரங்களில் ஒயின் மட்டுமே அருந்துவார்” என்று நேற்று கூறியிருந்தார். இந்நிலையில்தான் ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என்ற சர்ச்சையை சுப்ரமணியன் சுவாமி ஏற்படுத்தியுள்ளார். எனினும் சுப்ரமணியனின் குற்றச்சாட்டுக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மரணத்தை வைத்து அவர் அரசியல் செய்வதாகப் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

முன்னதாக, காங்கிரஸ் எம்பி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்றும் இது தொடர்பான வழக்கைச் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்றும் சுப்ரமணியன் சாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − four =

*