;
Athirady Tamil News

இந்தியா விரைவில் உலகின் 5-வது பொருளாதார வல்லரசாக மாறும் – பிரதமர் மோடி உறுதி..!!

0

இந்தியா விரைவில் உலகின் 5-வது பொருளாதார வல்லரசாக மாறும் என்று பிரதமர் மோடி கூறினார்.

டெல்லியில், இந்தியா-கொரியா வர்த்தக உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

இந்தியா, வர்த்தகத்துக்கு தயாராக உள்ளது. தொழில் தொடங்க சுதந்திரமான நாடாக இந்தியா உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இத்தகைய தடையற்ற, வளரும் சந்தையை பார்க்க முடியாது.

ஸ்திரமான வர்த்தக சூழ்நிலையை உருவாக்க எனது அரசு பாடுபட்டு வருகிறது. முடிவு எடுப்பதில், தன்னிச்சையான போக்கு நீக்கப்பட்டுள்ளது. அன்னிய நேரடி முதலீட்டில், 90 சதவீத ஒப்புதல்கள், தானியங்கி வழிமுறையில் செய்யப்படுகின்றன.

பாதுகாப்பு துறையை தவிர, இதர உற்பத்தி துறைகளில் முதலீட்டுக்கு அரசின் ஒப்புதல் பெற தேவையில்லை. உங்கள் முதலீட்டை மேம்படுத்த என்னென்ன தேவையோ, அதை செய்து கொடுக்க தயாராக உள்ளோம் என்று உறுதி அளிக்கிறேன்.

கார்ப்பரேட் துறையில் குறைவான வரி விகிதத்தை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், இந்தியா மிக விரைவில், உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாறும். அந்த அளவுக்கு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இந்தியா திகழ்ந்து வருகிறது. ஜனநாயகம், மக்கள்தொகை, தேவை ஆகிய மூன்றும் இந்தியாவில் ஒருங்கே அமைந்துள்ளது. இந்தியாவில் ஒரு கம்பெனியை தொடங்கி, ஒதுக்கீட்டு எண்ணை பெறுவது ஒருநாள் வேலைதான்.

உற்பத்தி துறையை பெரிய அளவில் முன்னேற்றி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க விரும்புகிறோம்.

வர்த்தகம், முதலீடு, நிர்வாகம் போன்றவற்றில் சீர்திருத்தங்களை செய்து வருகிறோம். ஜி.எஸ்.டி.யும் அதில் அடங்கும். ஆட்சிமுறைக்கு இடையூறாக இருந்த 1,400 பழமையான சட்டங்களை ரத்து செய்துள்ளோம்.

இவையெல்லாம், எங்கள் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளது. தேவை அடிப்படையில் மட்டுமே, அதிலும் உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் மட்டுமே தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*