;
Athirady Tamil News

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது..!!!

0

விழுப்புரம் கொடூர சம்பவம் குறித்துப் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று மும்பை சென்ற நடிகர் கமல்ஹாசன், போனி கபூரின் சகோதரர் அனில் கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகளிடம் துக்கம் விசாரித்துவிட்டு இன்று (பிப்ரவரி 27) சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “தமிழ்த்தாய் வாழ்த்து தமிழகத்தில் கண்டிப்பாகப் பாடப்பட வேண்டும். மதம் சார்ந்த பாடலைச் சென்னை ஐஐடியில் பாடியது கண்டனத்திற்குரியது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மக்கள் நீதி மய்யத்தின் கருத்தை ஆலோசனை நடத்திக் கூறுவோம். ஏனெனில் கட்சியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும்” என்று தெரிவித்தார்.

ஆந்திராவுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். ஆனால் அரசு இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்ற கேள்விக்கு, “எதற்குச் செல்கிறோம் என்றே தெரியாமல் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவருவதுதான் முதற்கட்ட வேலை என்று நான் கருதுவேன். சட்ட விரோதமாக நடக்கும் எந்த வேலையிலும் தமிழர்கள் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்” என்று பதில் கூறினார்.

மேலும் கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்…

விழுப்புரம் கொடூரத்திற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், சாதி ரீதியான இதுபோன்ற தாக்குதல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

கண்டிப்பாக சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு.

தனக்கும் கமலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தனக்கு சம்பள பாக்கி உள்ளதாகவும் நடிகை கவுதமி தெரிவித்துள்ளாரே?

எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உண்மைதான். அவருடைய சம்பள பாக்கி விவகாரத்தை ராஜ்கமல் நிறுவனம் பார்த்துக்கொள்ளும். அதற்கான அதிகாரிகள் உள்ளனர்.

மேலும் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்குகள் குறித்துப் பேசிய அவர், “ஸ்ரீதேவியின் குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்காகச் சென்றேன். ஸ்ரீதேவியின் மரணம் குறித்து மாறுபட்ட தகவல் வெளியாவது கஷ்டமாக உள்ளது. அதுகுறித்து தெரியாமல் நான் கருத்து எதுவும் கூறக் கூடாது. ஆனால் இது வருத்தத்திற்குரிய சம்பவம்” என்று கூறினார்.

தமிழக மருத்துவ மாணவர் ஹரியானாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளது குறித்த கேள்விக்கு, “தற்கொலை கூடாது என்ற எண்ணத்தை மாணவர்கள் மனதில் நாம் பதியவைக்க வேண்டும். மற்ற மாநில மாணவர்கள் தமிழகத்தில் வந்து அமைதியாக படித்துச் செல்கின்றனர். அதேபோல தமிழக மாணவர்கள் எல்லா மாநிலத்திலும் பாதுகாப்பாகப் படிக்க வேண்டும் என்பதே எனது கருத்து. அது இல்லாமல் போனால் நாடு நல்ல நாடு இல்லை என்று அர்த்தம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*