;
Athirady Tamil News

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை- வைகோ..!!

0

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து முதல்-அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் அடங்கிய கூட்டத்தில் பிரதமரை சந்தித்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

11 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஆரோக்கியமான கூட்டம் அது. 7½ கோடி மக்களின் சார்பாக பிரதமரை நேரில் சந்தித்து முறையிட வேண்டும் என்று நேரம் கேட்க அரசு முயற்சி செய்து வருகிறது.

ஆனால் நேரம் ஒதுக்கி தருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கர்நாடக தேர்தல் வரை சந்திக்காமல் இருக்கலாம் என நான் கருதுகிறேன்.

பிரதமர் தமிழக தலைவர்களை சந்திக்காமல் இருந்தால் அது 7½ கோடி தமிழர்களை உதாசீனப்படுத்துவதாகும். பிரதமரின் இந்த செயலை நான் ஊர் ஊருக்கு சென்று குற்றம் சாட்டுவேன். அதனால் தமிழக தலைவர்களை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கி தர வேண்டும்.

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை மீறி சென்னையில் நடந்த விழாவில் மத்திய மந்திரி நிதின்கட்காரி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியம் இல்லை என்று கூறி உள்ளார். நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.

ம.தி.மு.க.வின் உயர்நிலை கூட்டம் ஈரோட்டில் 5-ந் தேதி நடக்கிறது. 6-ந்தேதி பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது.

இதில் நதி நீர் ஆதாரத்தை காக்கவும், தமிழர்களின் வாழ்வாதாரங்களை காக்கவும், மத்திய அரசு எடுத்து வரும் முடிவுகளை எதிர்ப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 3 மருத்துவ மாணவர்கள் டெல்லியில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழக மாணவர்கள் உயர் மருத்துவ கல்வியை பெறக்கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மரணம் வருத்தம் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ம.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

கார்த்தி சிதம்பரம் கைது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஸ்ரீதேவி மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளை மீடியாக்கள் பெரிதுப்படுத்துவது கவலை அளிக்கிறது. தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுவது இளம் வாலிபர்கள். சிறுவர்களுக்கு பெற்றோர்கள் செல்போன்களை வாங்கி கொடுப்பதுதான் இதுபோன்ற தவறுகளுக்கு காரணமாகி விடுகிறது. குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இலக்கிய படைப்பாளிகளை பெருமைப்படுத்தும் வகையில் திருநெல்வேலி பைந்தமிழ் மன்றத்தின் சார்பில் இயற்றமிழ் வித்தகர் விருது, பொற்கிழி வழங்கும் விழா மார்ச் 16-ந்தேதி கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + thirteen =

*